பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

பாண்டிமாதேவி / முதல் பாகம்

மேலே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வீற்றிருந்தாள் அவள். இதயம் எண்ணங்களின் சுமைகளால் கனத்தது. இன்ப துன்ப உணர்ச்சிகளெல்லாம் பாழாய்ப் போன மனித இதயத்துக்குத்தான் உண்டு போலிருக்கிறது. அவள் கண்பார்வைக்கு முன்னால் நேற்றைக்கு இருந்தது போலவே இன்றும் பறளியாறு கவலையின்றி ஓடிக் கொண்டிருந்தது. கரையோரத்துக் கொன்றை கொத்துக் கொத்தாகப் பொன் பூத்திருந்தது. மரக்கிளையில் பறவைகள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. “நேற்றிரவு கொள்ளை போனதைப் பற்றி இவை சிறிதாவது பொருட்படுத்தினவா? சிறிதாவது கவலைப்பட்டனவா?”-குழல்மொழி நெடு மூச்சு விட்டாள். “உணரத் தெரிந்த உள்ளத்துக்குத்தான் துன்பமெல்லாம்!” தனக்குள் அவள் முனு முணுத்துக் கொண்டாள்.

அவள் இருந்த நிலையைப் பார்த்தபோது அருகில் நெருங்கவோ, ஆறுதல் கூறவோ, துணிவின்றி அஞ்சினார்கள் உடனிருந்த பணிப்பெண்கள்.

சுந்தர முடியும், வீரவாளும், பொற்சிம்மாசனமும் கொள்ளைபோன துயரத்துக்குமேல் தன்னுடைய உள்ளம் கொள்ளைபோன துயரம் பெரிதாக இருந்தது அவளுக்கு. துறவுக்கோலத்தில் மறைந்து நின்ற அந்த இளமையின் சிரிக்கும் முகத்தை, திரண்ட தோள்களை, பரந்த மார்பை, உருவெளியில் ஒன்றாக்கி நிறுத்திக் கண்களை மூடிக்கொண்டு பார்க்க முயன்றாள் குழல்மொழி. கண்முன் இருப்பவரை விழித்துக் கொண்டால்தான் பார்க்க முடியும்! கண் முன் இல்லாதவரையோ கண்கள் மூடிக்கொண்டால்தானே பார்க்க முடிகிறது? புறக்கண்ணால் எதிரில் இருப்பவரைப் பார்க்கும்போது அகக்கண் மூடுகிறது. அகக்கண்ணால் எங்கோ இருப்பவரை நினைவில் கொணர்ந்து பார்க்க முயலும் போது புறக்கண்கள் தாமே மூடிக்கொள்கின்றன. தியானம் செய்யும்போது தன் தந்தை கண்களை மூடிக்கொள்ளும் காட்சி குழல்மொழிக்கு நினைவு வந்தது. துறவியாக வந்தவர் யார் என்று தன் உள்ளத்துக்குப் புதிதாகத் தெரிந்த உண்மையோடு அவர் அழகையும் இணைத்து எண்ணிப்பார்த்தபோது