பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

273

அவளுக்கும் ஏக்கம் ஏக்கமாக வந்தது. சொந்தக்காரன் தனக்குச் சொந்தமான பொருள்களை எடுத்துக்கொண்டு போனதைக் கொள்ளை என்று ஒப்புக் கொள்ள அவள் மனம் தயாராயில்லை. சொந்தமில்லாத அவள் உள்ளத்தையும் புதிதாகச் சொந்தமாக்கிக்கொண்டு போனதைக் கொள்ளை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லுவது? எப்படிக் குறிப்பிடுவது? தன் தந்தை கூற்றத் தலைவர் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் புறப்பட்டுப் போனபின் துறவிக்கும், தனக்கும் இடையே நடந்த பேச்சுக்களை-நிகழ்ச்சிகளைக் கூடிய வரை அவரிடம் கூறாமல் மறைத்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டிருந்தாள் அவள். துறவிக்கு மாளிகையைச் சுற்றிக் காட்டியது. அப்படிச் சுற்றிக் காட்டும்போது அவரைப் பற்றித் தான் அறிந்த ஒரு பெரிய உண்மை, அதன்பின் அரசுரிமைப் பொருள்கள் வைத்திருந்த அறைக்கு அவரை அழைத்துச் சென்றது ஆகிய நிகழ்ச்சிகளையெல்லாம் தன் தந்தையிடம் கூறினால் அவர் தன்னையே கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சம் உள்ளுற அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

“துறவி இன்னாரென்ற உண்மை தனக்கும் முன்பே தன் தந்தைக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று விழிஞத்திலிருந்து அழைத்து வரும்போதே அவருக்கு அது தெரிந்துதான் இருக்கும். வேண்டுமென்றே என்னிடம் அவர் அதை மறைத்திருக்கலாம்!”—நினைக்க நினைக்க என்னென்னவோ செய்தது, மனம் குழம்பியது குழல்மொழிக்கு.

ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு, சிந்தனையைக் குழப்பிக்கொண்டிருந்த அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. கவலைகளும், மனக் குழப்பமும், அதிகமாக உள்ள சமயங்களில் பசுமையான சோலைகள், மலர்க்கூட்டங்கள், நீர்ப்பிரவாகங்கள் இவற்றைப் பார்த்தால் சிறிது நிம்மதி உண்டாகும். சிறு பருவத்திலிருந்தே அப்படி ஒரு பழக்கம் அவளுக்கு தந்தை எதற்காவது அவளைக் கண்டித்தால், தோழிகளோடு எந்தக் காரணத்திலாவது பிணக்கு ஏற்பட்டால், நந்தவனத்துக்கோ, பறளியாற்றங் கரைக்கோ போய்த் தனியாக உட்கார்ந்துவிடுவாள் அவள். கண்ணுக்கெட்டிய தூரம்

பா.தே. 18