பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

277

செய்துகொள்ள முடியும்?' இதை நினைக்கும்போது ஒரு துன்பத்திலிருந்து நீங்கி இன்னொரு துன்பத்தில் சிக்கிக்கொண்டுவிட்டது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அவன் அஞ்சினான். அந்த அச்சம் அவனுடைய முகத்தில், பார்வையில், பேச்சில் வெளிப்பட்டுத் தெரிந்தது.

"மதிவதனி கீழேயிருந்து யாரோ உன்னைக் கூப்பிடுகிறார்களே?”

“வேறு யாருமில்லை. என் தந்தைதான். நேரமாயிற்றே என்று என்னைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார்.”

“ஐயோ! இந்த நிலையில் உன்னோடு என்னை இங்கே பார்த்தால் என்ன நினைத்துக்கொள்வார்?”

அவனுடைய கேள்வியின் உட்பொருள் விளங்காதவள் போல் அவன் முகத்தைச் சாதாரணமாகப் பார்த்தாள் அவள். பின்பு மெல்லச் சிரித்தாள். சிறிது சிறிதாகச் செந்நிற மலர்போல் நடு இதழில் மலர்ந்த அந்தச் சிரிப்பு இதழ் முடியும் இடத்தில் வலது கன்னத்தில் ஒரு சிறு குழியாகத் தேங்கி மறைந்தது. அவள் சிரிக்கும்போதெல்லாம் தென்படும் அந்த நளினச் சுழிப்பு சிரிப்பின் இங்கிதத்தையெல்லாம் மொத்தமாக ஒன்று சேர்த்துக் காட்டும் இறுதி முத்திரையாக அமைந்தது. எதிரே நின்று காண்பவரின் எண்ணங்களைத் தேக்கிச் சிறைப்பிடிக்கும் அந்த இங்கிதச் சிரிப்பில் சற்றே கிறங்கி நின்றான் இராசசிம்மன்.

அப்போது இரண்டாவது முறையாகக் கீழேயிருந்து அவள் தந்தை அவளை இரைந்து கூப்பிடும் ஒலி எழுந்தது.

“மதிவதனீ! பேசாமல் நீ மட்டும் கீழே இறங்கிப்போய் விடு. நான் இப்படியே மரக்கிளையில் ஒளிந்துகொண்டு விடுகிறேன்.”

அவனுடைய குரலில் இருந்த நடுக்கத்தையும், பதற்றத்தையும் உணர்ந்து அவள் மீண்டும் புன்முறுவல் பூத்தாள். அவனுக்கோ இரைந்து பேசவே நா எழவில்லை. அவன் பயந்தான்.

“ஏன்தான் இப்படிப் பயப்படுகிறீர்களோ நீங்கள்? மரியாதையாக என்னோடு கீழே இறங்கி வரப்போகிறீர்களா? அல்லது நான் கீழே இறங்கிப்போய் மரத்தில் ஒரு திருடன்