பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பாண்டிமாதேவி / முதல் பாகம்


வைப்பதற்குத்தான் குனிகிறான்’ என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே தளபதி வாளை உருவிக்கொண்டு அவர்கள் மேல் பாய்ந்தான். இரண்டு பேருடைய வாள்களில் அவனது ஒரே வாள் மோதியது.

“தென்பாண்டி நாட்டுப் படைத் தலைவருக்கு இன்று நம்முடைய கையால் முடிவு காலம் போலிருக்கிறது!” என்றான் அந்த வீரர்களில் ஒருவன்.

“ஐயா, தளபதியாரே! இந்த ஏமாற்று வேலைகளெல்லாம் எங்களிடம் வேண்டாம்!” என்று மிகுந்த ஆத்திரத்தோடு சொல்லிக் கொண்டே வாளைச் சுழற்றி வீசினான் இன்னொருவன்.

“அது சரி! சாவு யாருக்கு என்பதை உங்கள் கைகளிலும், என் கையிலும் சுழலும் இந்த வாள்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்? பாண்டி நாட்டுத் தளபதிக்குச் சாவு நேர்ந்தாலும் அது இன்னொரு உண்மை வீரன் கையால்தான் நேரும். உங்களைப் போல யாரோ ஊர் பேர் தெரியாத ஒற்றர்களின் கைகளால் அல்ல! தெரிந்து கொள்ளுங்கள்!” என்று வீரமொழி கூறி அறை கூவியவாறே வாளை வேகமாகச் சுழற்றினான் வல்லாளதேவன்.

போர்ப் பழக்கம் மிகுந்த தளபதியின் வாள் வீச்சுக்கு முன்னால் அந்த இரண்டு ஒற்றர்களும் திணறிப் போய் விட்டனர். அவர்களில் ஒருவனைப் பாறை விளிம்பு வரையில் துரத்திக் கொண்டு போய்க் கடலுக்குள் தள்ளிவிட்டான் தளபதி. கடலுக்குள் விழுந்தவன் பாறைகளில் மோதி அடிபட்டு மூர்ச்சையாகிக் கீழே பாறைத் திடலின் மேல் கிடந்தான். மற்றொருவனுடைய வாளைத் தண்ணிருக்குள் படிர் என்று தட்டி விட்டபின் கையோடு அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“அடே, பதரே! நீ எந்த நாட்டு ஒற்றன்? என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். பாண்டி நாட்டு வீரர்கள் எப்போதும் உண்மையைத்தான் பேசுவார்கள். மற்றவர்களிட மிருந்தும் உண்மையைத்தான் கேட்பார்கள்”.