பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

பாண்டிமாதேவி / முதல் பாகம்

ஒளிந்துகொண்டிருக்கிறான் என்று என் தந்தையிடம் சொல்லட்டுமா?”

“ஐயோ, வேண்டாம் பெண்ணே நானே வந்து விடுகிறேன்.”

முதலில் மரக்கிளையிலிருந்து கீழே இறங்கிக் கால் வைத்துக்கொண்டு, கையை நீட்டிக் குமாரபாண்டியனை இறக்கிவிட்டாள் அவள்.

மரத்திலிருந்து முன்பின் அறிமுகமில்லாத இளைஞன் ஒருவனோடு தம் பெண் இறங்குவதைக் கண்டு ஒன்றும் விளங்காமல் திகைப்பும் சிறிது சினமும் அடைந்தார் கீழே நின்று கொண்டிருந்த மதிவதனியின் தந்தை.

“அப்பா! இவர்தான் நமது வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கியவர்” என்று அவனை இழுத்துக்கொண்டு போய்த் தன் தந்தைக்கு அறிமுகம் செய்துவைத்தாள். சிறு குழந்தை வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல் கண்டெடுத்த விளையாட்டுப் பொம்மையை அடக்கமுடியாத ஆசைத்துடிப்போடு பெரியவர்களிடம் கொண்டுபோய்க் காட்டுவது போன்ற மகிழ்ச்சித்துள்ளல் மதிவதனியிடம் இருந்தது. முதலைக்கு வலை விரித்துக்கொண்டு மரத்தின்மேல் காத்திருந்தது, அப்போது அவன் எவராலோ துரத்தப்பட்டு வலையின் குறுக்கே ஓடிவந்தது, அவனைக் காப்பாற்றுவதற்காகத் தான் வலையைத் தூக்கியது ஆகிய எல்லா நிகழ்ச்சிகளையும் ஒரே மூச்சில் தன் தந்தையிடம் சொல்லிவிட்டாள் அவள்.

விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டபின்புதான் அந்த மனிதருடைய முகத்தில் மலர்ச்சியைக் காணமுடிந்தது.

“விலைமதிப்பற்ற இந்தச் சங்கை வாங்குவதற்கு யார் வரப்போகிறார்கள் என்று நெடுநாட்கள் காத்திருந்தோம். இத்தனை நாட்களுக்குப் பிறகு நீங்கள் அந்தப் பாக்கியத்தை அடைந்திருக்கிறீர்கள்?" என்று சொல்லிக்கொண்டே குமாரபாண்டியனின் கையிலிருந்த சங்கை வாங்கி மேலும் கீழும் திருப்பிப் பார்த்தார். பின்பு அந்தச் சங்கை வைத்திருப்பவருக்கு அதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை