பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

27


பிடிபட்டவன் பதில் சொல்லாமல் திருட்டு விழி விழித்தான். “பதில் சொல்கிறாயா? உன்னைச் சொல்ல வைக்கட்டுமா?’ என்று கையை ஓங்கினான் தளபதி, பிடிபட்ட ஒற்றனின் உடல் கிடுகிடு வென்று நடுங்கியது. கலக்கமும் சஞ்சலமும் அவன் முகத்தில் பதிந்தன. வாயைத் திறக்காமல் ஊமை நடிப்பு நடித்தான்.

வல்லாளதேவன் தன்னை அதட்டிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று தனது இடுப்புக் கச்சையிலிருந்து ஏதோ ஒரு பொருளை உருவி எடுத்துக் கடலுக்குள் எறிய முயன்றான் அந்த ஒற்றன். அவன் கை இடது பக்கத்து இடுப்பைத் தடவி எதையோ எடுக்க முயல்வதை அவனைப் பிடித்த கணத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த தளபதி, விருட்டென்று எறிவதற்கு ஓங்கிய அவன் கையைப் பிடித்து அதிலிருந்த பொருளைப் பறித்துக் கொண்டான். அது ஒரு திருமுக ஒலை. ஒரு கையால் அவனைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் அந்தத் திருமுக ஒலையைக் கண்களுக்கு அருகே கொண்டுபோய், நிலா ஒளியில் அதில் என்ன வரைந்திருக்கிறதென்று வாசிக்க முயன்றான்.

ஆனால் அதே சமயத்தில் கோவிலின் மேல் தளத்தில் வீரர்கள் ஏறி ஒடும் ஒசையும், “விடாதே பிடி மகாராணியின் மேல் வேலை எறிந்து விட்டு ஓடுகிறான்!” என்ற கூக்குரல்களுமாகக் கேட்கவே அவர்கள் இருவருடைய கவனமும் ஒரே சமயத்தில் கோவிலின் பக்கம் திரும்பியது.

அவர்கள் திரும்பிப் பார்த்த சமயத்தில் கோவில் மதிலின் பின்புறமாக உள்ள ஆழமான கடற்பகுதியில் மேல் தளத்திலிருந்து ஒர் உருவம் குதிப்பது மட்டும் தெரிந்தது. மேல்தளத்தில் கேட்ட கூக்குரலும் நடந்த நிகழ்ச்சியும் தன்னைவிடத் தன் கையில் பிடிப்பட்டிருந்த ஒற்றனையே அதிகமாகக் கலவரத்துக்கும் திடுக்கிடுதலுக்கும் உள்ளாக்கியிருக்கின்றன என்பதை அவன் முகக் குறிப்புக்களால் ஒரு வாறு தெரிந்து கொண்டான் வல்லாளதேவன்.