பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

“அழகுள்ளவர்களுக்குத்தானே அழகான பொருள்கள் தேவை?” என்று தன் கணவனைப் பேச்சில் வென்றாள் அந்தப் பட்டத்தரசி. சுற்றிலும் இருந்த உயர்தர அரசாங்க அதிகாரிகள் அரசனுக்கும் அரசிக்கும் இடையே நிகழ்ந்த இந்த நகைச்சுவைப் பேச்சைச் சிரித்து வரவேற்றனர்.

கடலில் மூழ்கிய இளைஞர்கள் கிடைத்தமட்டில் முத்துச் சிப்பிகளை அள்ளிக்கொண்டு வந்தார்கள். மறுபடியும் மறுபடியும் உடல் அலுப்பு அடைகின்றவரையில் மூழ்கிக்கொண்டே இருந்தார்கள். முத்து வணிகத்துக்காக வரும் அயல்நாட்டு வணிகர்களின் கப்பல்கள் மேலும் மேலும் வந்துகொண்டே இருந்தன. துறையில் கப்பல்கள் நிறுத்தப் போதுமான இடமின்றி ஒரே நெருக்கமாக இருந்தது. எனவே கடலில் கண்ணுக்குத் தென்பட்ட தொலைவு வரை கப்பல்களின் பாய் மரக் கூம்புகள் தெரிந்தன. பல நாட்டுக் கொடிகள், பலவிதச் சின்னங்களோடு, பல நிறத்தில் அவற்றின் உச்சியில் பறந்தன. வானில் வட்டமிடும் பறவைக் கூட்டங்களுக்கும் அந்தக் கொடிகளுக்கும் வேறுபாடு தெரியாமல் பார்க்கிறவர்கள் மயக்கமுறும் வண்ணம் அவை அதிகமாயிருந்தன.

ஐந்தாறு நாழிகைகளுக்குப் பின் முத்துக்குளி நின்றது. அதுவரையில் எடுத்த சிப்பிகள் அரசனுக்கு முன்னால் வரிசையாகக் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்த உயர்ந்த முத்துக்களை எடுத்து அரசனிடம் கொண்டு வந்து கொடுத்து வணங்கினான் ஒரு வயது முதிர்ந்த பரதவன். அது ஒரு வழக்கமான மரியாதை. அந்த முத்துக்களை பெற்றுக் கொண்டு அரசன் ஏதோ ஒரு குறிப்பை நினைப்பூட்டும் புன்னகையோடு தன்னுடைய பட்டத்தரசியின் கையில் அவைகளைக் கொடுத்தான்.

“ஆண்பிள்ளைகள் அதிகத் துன்பப்பட்டு அடையும் பொருள்களெல்லாம் பெண்களுக்கே வந்து சேர்கின்றன!" அவற்றை வாங்கிக்கொண்டு அவள் குறும்பாகப் பேசினாள்.

“என்ன செய்யலாம்? உலகம் பரம்பரையாக அப்படிக் கெட்டுப்போய்க் கொண்டிருக்கிறது!"— அவன் வருத்தப்பட்டுச் சொல்வதுபோல் இந்த வார்த்தைகளைச் சொல்லி நடித்தான்.