பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

289

சுற்றி நின்றவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் இரைந்தே சிரித்துவிட்டார்கள். பட்டத்தரசி சிறிது நாணத்தோடு தலையை குனிந்து கொண்டாள்.

சிப்பிகளை விலை பேசும் நேரம் வந்தது. அதற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் வாணிகர்கள் நூற்றுக் கணக்கில் கூடினார்கள். பெரும்பெயர்ச் சாத்தனும் அவன் மனைவியும், கரவந்தபுரத்து அரண்மனையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் சிப்பிகளுக்கு அருகே இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

மன்னர்களுக்கு ஈடான செல்வச் செருக்குள்ள சில பெரிய வாணிகர்கள் மட்டும் முன்வந்து தைரியமாக விலை கேட்க ஆரம்பித்தனர். அப்படி முன்வந்த பெரிய வாணிகர்களின் தொகை பத்துப் பன்னிரண்டு பேருக்குமேல் இருக்காது. அவர்களில் இருவர் விலை கேட்கத் தொடங்கிய விதம், கேட்கும் போது வார்த்தைகளை வெளியிட்ட முறை — எதுவும் மரியாதையாகத் தெரியவில்லை. எடுத்தெறிந்த பேச்சும், குதர்க்கமும் அவ்விருவரும் வியாபாரத்துக்குப் புதியவர்களோ என்று நினைக்கச் செய்தன. எல்லோருடைய கவனமும் அந்த இருவர் மேல் நிலைத்தன. அப்படி நடந்து கொண்டார்கள் அவர்கள். இதையெல்லாம் பார்த்த பெரும்பெயர்ச்சாத்தன் பொறுமையாக இருந்தான்.

“எங்கள் நாட்டிலும் முத்துக்குளிக்கிறோம்! ஆனால் இவ்வளவு அநியாய விலைக்கு விற்றுக் கொள்ளை யடிப்பதில்லை.”

“நீங்கள் எந்த நாடு?”

“ஏன் அதைச் சொன்னால்தான் எங்களுக்கு முத்து விற்பீர்களோ?”

“அது இல்லை. முத்துக்களைப் புளியங்கொட்டைபோல் மலிவாக விற்கும் நாடு எது என்று தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறது எனக்கு.”

பா.தே.19