பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா. பார்த்தசாரதி

291

போய்விட்டார்கள் அவர்கள். ஏற்கெனவே வடபுறம் எல்லைக் காவல் வீரர்களிடமிருந்து அவனுக்குச் சில செய்திகள் வந்திருந்தன. கடந்த இரு வாரங்களுக்குள் சோழநாட்டு ஒற்றர்களாகச் சந்தேகிக்கப் பட்டவர்கள் இருபது முப்பது பேருக்குமேல் உக்கிரன் கோட்டைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பாண்டி நாட்டு எல்லைக்குள் அந்நியர்களை எச்சரிக்கையாகக் கவனித்து அனுமதிக்குமாறு அங்கங்கே எல்லைப்புறக் காவல் வீரர்கள் ஆணையிடப்பட்டிருந்தார்கள். அப்படியிருந்தும் வாணிகர்களைப்போல், துறவிகளைப்போல், யாராவது வந்து கொண்டுதான் இருந்தார்கள்.

முத்துக்குளி விழாவுக்கு மறுநாள் பொதியமலைச் சாரலில் பொருநை நதியில் புனலாட்டு விழாவிற்குச் சென்றபோது அங்கும் அந்த முத்து வாணிகர் இருவரைச் சந்தித்தான் பெரும்பெயர்ச்சாத்தன். மூன்றாம் நாள் கரவந்தபுரம் திரும்பியபின் ஒரு மாலைப்போதில் மேல்மாடத்திலிருந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருந்த பெரும்பெயர்ச்சாத்தனின் பட்டத்தரசி அதே ஆட்கள் தெருவில் நடந்து சென்றதைக் கண்டதாகக் கூறினாள். பொறுமை இழந்து பெரும்பெயர்ச்சாத்தன், மானகவசனைக் கூப்பிட்டு “இனியும் அவர்களைப் பின்பற்ற வேண்டாம் பிடித்துச் சிறையில்அடைக்க ஏற்பாடு செய்” என்று கடுமையாக உத்தரவிட்டான். ஆனால் அந்த இருவரும் அகப்படவே இல்லை!

கரவந்தபுரத்து எல்லையிலேயே தென்படாமல் மறைந்து விட்டார்கள். பாண்டியநாட்டு எல்லையோரச் சிற்றூர்களில் சிறு களவுகள், கலவரங்கள், அடிபிடிகள் நடக்கும் செய்திகள் வளர்ந்தன. இந்த அடையாளங்களெல்லாம் எதற்கு முன் அறிவிப்பு என்பது பெரும்பெயர்ச்சாத்தனுக்குப் புரிந்து விட்டது.

“இனியும் மூடி மறைப்பதில் பயனில்லை. செய்தியை மகாமண்டலேசுவரருக்கும், மகாராணியாருக்கும் எட்டவிட வேண்டியதுதான்” என்று தீர்மானத்துக்கு வந்தான். அந்தத் தீர்மானத்தை உடனே செயலாற்றியும் முடித்துவிட்டான்.