பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. கொற்கையில் குழப்பம்

சிவந்த வாயும், வெள்ளிய நகையும், பிறழும் கண்களும், சுருண்ட கூந்தலும், துவண்ட நடையுமாக முத்துச் சலாபத்துக்கு அருகிலிருந்த கடல் துறையில் இளம் பெண்கள் நீராடிக் கொண்டிருந்தனர். வேறு சில சிறுமிகள் கடற்கரை ஈரமணலில் வீடுகட்டி விளையாடினர். அவர்களுடைய மணல் வீட்டைக் கடல் அலை அழித்தது. அதைக் கண்டு நினைவு மலராப் பருவத்தையுடைய அந்தச் சிறுமிகளுக்குக் கடலின் மேல் சினம் மூண்டது. “ஏ, கடலே! இரு இரு! என் அம்மாவிடம் சொல்லிக் கண்டிக்கச் சொல்கிறேன்” என்று கடலைப் பயமுறுத்திவிட்டு ஆத்திரமும் அழுகையுமாக வெறுப்போடு தன் கழுத்திலிருந்த முத்துமாலையை அறுத்துச் சிதறி அடம் பிடித்தாள் ஒரு சிறுமி. கடற்கரையோரத்துப் புன்னை மரத்திலிருந்து உதிர்ந்த அரும்புகளுக்கும் இப்படிச் சிதறப்பட்ட முத்துக்களுக்கும் வேறுபாடு தெரியாமல் அந்தப் பக்கம் நடந்து வருவோர் திகைத்தனர்.

கொற்கைக் கடலில் இளம் பெண்கள் நீராடி மகிழ்வதே ஒரு தனி அழகு. இளம்பெண் ஒருத்தி தன் தோழியின் தோள் மேல் வாரி இறைப்பதற்காக இரண்டு உள்ளங் கைகளிலும் நீரை அள்ளினாள். அதில் அவள் கண்கள் தெரிந்தன. ஐயோ மீன்! என்று தண்ணிரை விட்டுக் கரையேறிப் பயந்துபோய் மணலில் உட்கார்ந்துவிட்டாள் அந்தப் பெண் !

"தொக்குத் துறைபடியும் தொண்டைஅம்
செவ்வாய் மகளிர் தோள்மேற் பெய்வான்
கைக்கொண்ட நீருள்கருங்கண்
பிறழ்வ கயலென் றெண்ணி
மெய்க் கென்றும் பெய்கல்லார் மீண்டு
கரைக்கே சொரிந்து மீள்வார் காணார்
எக்கர் மணங்கிளைக்கும் ஏழை
மகளிர்க்கே எறிநீர்க் கொற்கை"

என்று இப்படியெல்லாம் முத்து விளையும் கொற்கைத் துறையைப்பற்றி முத்து முத்தான தமிழ்ப் பாடல்களைப் பழம்