பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

293

புலவர்கள் பாடியிருந்தார்கள். பல்லாயிரங் காலத்துப்பயிர் அந்தப் பெருமை. மானமும், வீரமும், புகழும், மாண்பும் பாண்டிய மரபுக்குக் கொடுத்த பெருமை அது! பாண்டிய நாட்டு மண்ணைத்தான் தங்கள் மறத்தினாற் காத்தனர் பாண்டியர். ஆனால் முத்து விளையும் கொற்கைக் கடலை அறத்தினாற் காத்தார்கள்.

“மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறைமுத்து”

என்று எவ்வளவு நன்றாகச் சங்கநூற் கவிஞர் அந்தப் பெருந்தன்மையைப் பாராட்டியிருக்கிறார்!

இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தப் பாராட்டெல்லாம் வெறும் பழம் பெருமையாகி விட்டனவே. அறத்தினால் காத்த கொற்கையை மறத்தினாற் காக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பகைமையும் பூசலும் வளரும்போது உலகத்தில் எந்தப் பொருளையுமே அறத்தினால் காக்க முடிவதில்லை. தங்க நகையை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டுவதுபோல் மெய்யைக்கூட பொய்யால்தான் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. வலிமையுள்ளவனுக்கு ஆசைகள் வளரும்போது வலிமையற்றவன் தன் பொருள்களை அறத்தினால் எப்படிக் காக்க முடியும்?

முடியாதுதான்! முடியவும் இல்லை, முத்துக்குளி விழாவுக்கு மறுநாள் கொற்கையில் நடந்த குழப்பங்கள் இந்த உண்மையை விளக்கிவிட்டன. கரவந்தபுரத்து அரசனும், அரசியும், பரிவாரங்களும் விழாவன்றைக்கு மாலையிலேயே பொருநைப் புனலாட்டு விழாவுக்காகத் திரும்பிச் சென்றுவிட்டனர். முத்துச்சலாபத்தில் நடைபெற வேண்டிய வாணிகத்தை மேற்பார்வை செய்வதற்குக் கரவந்தபுரத்து அரசாங்கப் பிரதிநிதிகளாகக் காவிதிப் பட்டம்பெற்ற அதிகாரி ஒருவரும், ஏனாதிப் பட்டம் உள்படு கருமத்தலைவர் ஒருவரும், ‘எட்டிப் பட்டம்பெற்ற வணிகர் ஒருவரும் கொற்கையில் தங்கியிருந்தார்கள். பாண்டிய மன்னர்கள் இளவரசர்களாக இருக்கும் காலத்தில் வந்து தங்கியிருப்பதற்காகப் பழங்காலத்தில்