பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

கட்டப்பட்ட அரசு மாளிகை ஒன்று கொற்கையில் உண்டு. அது கடல் துறையிலிருந்து சிறிது தொலைவு தள்ளி இருந்தது.

முத்துச் சலாபத்தை மேற்பார்வையிடக் கொற்கையில் இருந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மூவரும் அந்த அரசன் மாளிகையில்தான் தங்கியிருந்தனர்.

காலையில் விழாவுக்காக வந்து கூடியிருந்த கூட்டம் இப்போது இல்லை. அரசன் புனலாட்டு விழாவுக்காகப் பொதிய மலைச் சாரலுக்குத் திரும்பியதும் கூட்டமும் கலைந்திருந்தது. ஆனாலும் அதனாற் கொற்கைத் துறையின் கலகலப்புக் குறைந்து விடவில்லை. ஈழம், கடாரம் புட்பகம், சாவகம், சீனம், யவனம் முதலிய பல நாட்டு வாணிகர்களும், கப்பல்களும் நிறைந்திருக்கும்போது கொற்கைத் துறையின்ஆரவாரத்துக்கு எப்படிக் குறைவு வரும்?

பேரரசன் மறைந்தபின் குறும்புசெய்யத் தலையெடுக்கும் சிறு பகைவர்களைப்போல் கதிரவன் ஒளியிழந்த வானில் விண்மீன்கள் மினுக்கின. சுற்றுப்புறம் இருண்டது. மணற்பரப்பில் தெரிந்த வெண்மையான கூடாரங்களின் தீபங்கள் ஒளிபரப்பத் தொடங்கும் நேரம், கப்பல்களைக் கரையோரமாக இழுத்து நங்கூரம் பாய்ச்சுவோர் அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக ஒருவகைப் பாட்டுப் பாடுவார்கள். துறைமுகப் பகுதியில்அந்தப்பாட்டொலி எப்போதும் ஒலித்தவண்ணம் இருக்கும். அதுகூட அடங்கிவிட்டது. துறைப் பக்கமாகச் சிறுகோபுரம் போல் உயர்ந்திருந்த கலங்கரை உச்சியில் தீ கொழுந்து விட்டுக் காற்றில் எரிந்து கொண்டிருந்தது. வரிசையாக நின்ற பாய்மரக் கப்பல்களில் காற்று உரசும்போது ஒருவகை அழுத்தமான ஓசை உண்டாயிற்று. மற்றப்படித் துறையின் ஆரவாரத்தை இரவின் அமைதி குறைந்து விட்டிருந்தது!

ஆனால் வாணிகர்களின் கூடாரங்கள் இருந்த பகுதிகளில் இதற்கு நேர்மாறாகப் பாட்டும், கூத்துமாய் ஆரவாரம் அதிகரித்திருந்தது. நீண்ட தொலைவு பயணம் செய்து வியாபாரத்துக்காக வந்து தங்கியுள்ள இடத்திலும் தங்கள் இன்பப்பொழுது போக்குகளை, அவர்கள் விட்டுக்கொடுக்கத்