பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

போகிறார்கள்” என்று அவள் கையைப்பற்றிப் பரபரவென்று இழுத்துக்கொண்டு கூடாரத்துக்குள் போய்விட்டான். உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கையும் அணைத்து விட்டான். ஓடிவந்தவன் வேறு யாரும் இல்லை. முன்பொரு நாள் முன்சிறை அறக்கோட்டத்தில் நடு இரவில் வந்து தங்க இடம் கேட்டு வம்பு செய்த மூன்று முரட்டு ஆட்களில் ஒருவன்தான் அவன்.

என்ன நடந்தது? அவனை ஏன் துரத்திக்கொண்டு வருகிறார்கள்? சலாபத்துக்கு அருகில் கூடாரங்கள் ஏன் தீப்பிடித்து எரிகின்றன?— இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும், தெரிந்துகொள்ள முடியாத சூழ்நிலையுமாகக் குழம்பிக் கலவரமுற்ற மனநிலையோடு விடிகிறவரை அந்தக் கூடாரத்து இருளிலேயே அடைபட்டுக் கிடந்தனர் அவர்கள் இருவரும்.

இரவின் நீண்ட யாமங்கள் எப்படித்தான் ஒவ்வொன்றாக விரைவில் கழிந்தனவோ? பொழுது விடிந்தபோது போர் நடந்து முடிந்த களம்போல் எல்லா ஒலிகளையும் விழுங்கித் தனதாக்கிக்கொள்ளும் ஒரு நீண்ட மெளனம் அந்தப் பிரதேசத்தில் சூழ்ந்திருந்தது.

அண்டராதித்தனும் கோதையும் எழுந்திருந்து ஊருக்குப் புறப்படத் தயாரானார்கள். புறப்படுவதற்குமுன் முத்துச் சலாபமும்,துறையின் பிரதான விதிகளும், சிப்பிகளைக் குவித்து வீரர்கள் காத்து நிற்கும் சிப்பிக் கிடங்குகளும் இருந்த பகுதியில் போய்ப் பார்த்தனர்.

அந்தப் பகுதியில் கூடாரங்கள் எரிந்து சின்னாபின்னமாகிக் கிடந்தன. ஆள் நடமாட்டம் இல்லாமல் களையின்றி ஒளியின்றி இருந்தது அப்பகுதி. கடைகளெல்லாம் மூடி அடைக்கப் பெற்றிருந்தன. கிடங்குகளில் பத்திரமாகக் குவிக்கப்பட்டிருந்த சிப்பிகள் மணற்பரப்பில் தாறுமாறாக சிதறிக் கிடந்தன. சில குவியல்களைக் காணவே இல்லை. நெடுந்தொலைவிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் பயத்துடனும், பதற்றத்துடனும் அவசர அவசரமாகக் கப்பலேறிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவில் பாட்டும் கூத்துமாக அவர்கள் கூடாரங்கள் இருந்த