பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா. பார்த்தசாரதி

301

தாலும் தன்னைப் பொறுத்தவரையில் உறுதியாக இருந்து காரியங்களைச் செய்து வரவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டிருந்தான் அவன்.

வடக்கு எல்லைப் பகுதிகளில் பலமான காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும் அங்கிருந்தும் சில கலவரச் செய்திகள் காதுக்கு எட்டிக்கொண்டுதான் இருந்தன. எல்லை முடியும் இடத்தில் நடப்பட்டிருந்த கொழுக்குத்துக் கற்கள் (எல்லை பிரியும் இடத்தை விளக்கும் அடையாளக் கற்கள்) இரவோடு இரவாகப் பிடுங்கி எறிந்து உடைக்கப்பட்டிருந்தனவாம்.

தன்னால் முடிந்த காவல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அரண்மனைக்குச் செய்தி கொண்டுபோன மானகவசன் திரும்ப வருவதை எதிர்பார்த்திருந்தான் பெரும் பெயர்ச்சாத்தன். ஏற்கெனவே சந்தேகத்தின் பேரில் சிறைபிடிக்கப்பட்டிருந்த வடதிசை ஒற்றர்கள் சிலரைப் பயமுறுத்தியும், துன்புறுத்தியும் அவர்களிடமிருந்து ஒரு சில உண்மைகளை அறிய முடிந்திருந்தது. படையெடுக்க முனைந்திருப்பவர்கள் யார் யாரென்றும், அவர்களுடைய நோக்கங்கள் என்னென்னவென்றும் பெரும்பெயர்ச்சாத்தன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அரண்மனைக்கு அனுப்பிய திருமுகத்திலும் அதைக் குறிப்பிட்டிருந்தான். கரவந்தபுரத்துக் கோட்டை சிறந்த பாதுகாவல் அமைப்புக்களைக் கொண்டது. பராந்தக பாண்டியரும், பெரும்பெயர்ச் சாத்தனின் தந்தை உக்கிரனும் அவர்கள் காலத்தில் வடக்கு எல்லைப் பாதுகாப்பையும் வேறு சில வசதிகளையும் எண்ணித் திட்டமிட்டு உருவாக்கிய கோட்டை அது ஆழமான அகன்ற அகழி. எந்திரப் பொறிகளும் தந்திரச்செயல்களும் மிக்க உயரமான மதிற் சுவர். சிலப்பதிகாரத்து மதுரைக் காண்டத்தில் வருணிக்கப்பட்டிருந்த அந்நாளைய மதுரைக் கோட்டையை மனத்தில் கொண்டு கட்டப்பட்டிருந்தது கரவந்தபுரத்துக்கோட்டை. கோட்டைக் கதவுகளை அடைத்து, முட்டுக்கொடுப்பதற்கு மூன்று பெரிய கணையமரங்கள் தேவையென்றால் அதன் பெருமையை வேறு எப்படிக் கூறமுடியும் : இப்படியெல்லாம் இருந்தும்