பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

அந்தச் செய்திகள் அரண்மனை எல்லைக்குள் வந்து சேருவதற்கு முன்பே வெளியில் பரவி விட்டன என்பதை அவர் உணரவில்லை.

இடையாற்றுமங்கலத்து நிகழ்ச்சி மறுநாள் பொழுது புலரும்போதே சுற்றுப் புறங்களுக்கு எட்டிவிட்டது. போர் வரப்போகிறது என்ற செய்தியைச் சூழ்நிலை இருக்கிற விதத்தால் மக்களே அனுமானித்துக் கொள்ள முடிந்தது. ஆகவே செய்திகளை வெளியில் தெரியாமல் ஒடுக்கிவைக்க வேண்டுமென்ற ஏற்பாடு அவர் புரிந்துகொள்ள முடியாதபடி அவருக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துவிட்டது.

‘அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போய்விட்டனஎன்ற செய்தியை அடுத்து — வசந்த மண்டபத்துத் துறவியைக் காணவில்லை— என்று அம்பலவன் வேளான் கூறுவான் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. குமார பாண்டியர் தன்னிடமே இரகசியமாகத் தங்கியிருப்பதாகவும் உடனே அவரை அரண்மனைக்கு அழைத்து வருவதாகவும் மகாராணியார் முன்னிலையில் அவர் ஒப்புக் கொண்டிருந்தார். நாளை நடக்கப்போவதை மட்டுமல்ல, நாற்பது ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்க முடியும் என்று அனுமானிக்கிற அளவுக்கு அறிவும், சிந்தனையும் உள்ள அவரே இந்த இடத்தில் புள்ளி பிசகிவிட்டார்.இடையாற்று மங்கலம் மகாமண்டலேசுவரருடைய கணக்குத் தப்புக் கணக்காகிவிட்டது.

குமார பாண்டியன் இராசசிம்மன் தன்னைமீறி எங்கும் எதற்கும் போகத்துணிவான் என்று அவர் நினைத்ததில்லை. அவன் மீறிச் செல்ல வழியின்றித் தம் அருமைப் புதல்வியையே துணை வைத்துவிட்டு வந்தார். எல்லோரையும், ஏமாற்றிவிட்டுத் தனது முன்னோர் செல்வத்தையும் கிளப்பிக் கொண்டு போய்விட்டான் அவன். அவன்தான் அவற்றைக் கொண்டு போயிருக்கவேண்டும் என்பதுகூட நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக இணைத்துப் பார்த்து அவராக அனுமானித்துக் கொண்டதுதான்.