பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

307

இப்போது மகாராணியாருக்கு என்ன பதில் சொல்வதென்ற திகைப்பு அவருக்கு ஏற்பட்டது. எல்லோரையும் அனுப்பிவிட்டு அவர் மறுபடியும் மகாராணியாரைச் சந்திக்கச் சென்றார். மகராணியும் அவரையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது போல் அங்கேயே இருந்தார்.

"வாருங்கள் ! நீங்கள் குமார பாண்டியன் இராசசிம்மனைப்பற்றி நாம் தனிமையில் ஏதோ பேசவேண்டுமென்று கூறிவிட்டுப் போயிருந்தீர்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் ஒவ்வொரு கணமும் உங்களை எதிர்பார்த்து இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.” மகாராணியின் வார்த்தைகளில் தம் புதல்வனைப் பற்றி அறியக் காத்திருக்கும் ஆவல் தொனித்தது.

இடையாற்றுமங்கலம் நம்பி எதிரேயிருந்த இருக்கையில் அமர்ந்தார். நல்ல கண்ணாடியில் சிறிது புகை படிந்தாற்போல அவர் முகபாவம் ஒளி மங்கியிருந்தது. எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டபின் மகாராணியாருக்கு மறுமொழி கூறத் தொடங்கினார்.

“தேவி! குமார பாண்டியரை எந்தெந்த உயர்ந்த நோக்கங்களோடு இடையாற்றுமங்கலத்தில் என்னிடம் மறைவாகக் கொண்டுவந்து தங்கச் செய்திருந்தேனோ, அவற்றுக்கு முற்றிலும் மாறாக அவர் நடந்து கொண்டு விட்டார்.”

“அப்படி என்ன செய்தான் அவன்?"

“அதைத் தங்களிடம் மட்டும்தான் நான் சொல்ல முடியும், எல்லாருக்கும் தெரிந்தால் குமார பாண்டியருடைய பெருமையையே நாம் விட்டுக் கொடுத்தது போலாகிவிடும்.”

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெரிதாக ஏதோ செய்துவிட்டான் போல் அல்லவா தோன்றுகிறது!”

“பெரிதுதான்! நேற்றிரவு நம்முடைய பாண்டியமரபின் மாபெரும் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போனதாக இப்போது செய்தி வந்ததே, அதைச் செய்தவர் இடையாற்று மங்கலத்தில் வந்து தங்கியிருந்த தங்கள் குமாரர் இராசசிம்மனேதான்.”