பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

313

நாங்கள் சாதாரண மனித இயல்பை மனத்தில் கொண்டு பயமுறுத்திச் சொல்லியிருக்கிறோம்” என்றார் குணவீர பண்டிதர். -

“எங்கே? நிலையாமையைப் பற்றி ஒரு பாட்டுச் சொல்லுங்கள்!” என்று அவரைக் கேட்டார், அதுவரையில் பேசாமல் இருந்த மகாராணி, -

“இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல
வளமையுங் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக் கென்று மென்றும் விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொள்மின்!”

குணவீர பண்டிதரின் குரல் கணிரென்று ஒலித்து ஒய்ந்தது.

"இதுதான் எங்கள் தத்துவம், இன்றைக்கு இருப்பதை என்றைக்கும் இருக்குமென்று எண்ணி நாங்கள் நம்பி ஏமாறுவதில்லை. என்றைக்கும் இருக்கும் எதுவோ அதைப் பயிர் செய்ய முயலுகிறோம்.”—அவரே விளக்கினார்.

"தமிழ் இலக்கியத்திலுள்ள பெரும்பாலான சமணப்பாடல்கள் இதைத்தான் வற்புறுத்துகின்றன” என்று அதங்கோட்டாசிரியர் கூறினார்.

“சித்திரக்காரனுக்கு ஏழு வர்ணங்கள் மேலும் ஒரே மாதிரி அன்புதான். உலகத்திலுள்ள இன்பம், துன்பம் எல்லா உணர்ச்சிகளையும் நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாமே நிலையாதவை என்ற உணர்வில் அடங்கியவை. நிலையாதவற்றை வெறுக்கவில்லை. அனுதாபப்படுகிறோம். ‘எவ்வளவு நாட்களானாலும் வாடாது’ என்ற பேதமை நினைவுடன் கையில் பூச்செண்டை ஏந்திக்கொண்டிருக்கும் குழந்தை மாதிரி உலகம் இருக்கிறது. நாங்கள் தூர இருந்து அந்தக் குழந்தையைப் பார்த்து அனுதாபப்படும் வயதானவர் போலிருக்கிறோம். காரணம்? 'அந்தப் பூச்செண்டு வாடிவிடும்’ என்ற உண்மை எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது!” என்றார் குணவீரர்.

“விவாத முறைக்கு உங்கள் பேச்சு ஏற்கும்! ஆனால் நடை முறைக்கு ஒத்துவராதே” என்றார் பவழக்கனிவாயர்.