பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

315

ஏற்பாடுகளை நீங்களே சமாளித்துப் பாதுகாத்துக்கெள்ள வேண்டியது” என்ற கருத்தடங்கிய திருமுகத்தோடு மானகவசனை அன்று காலையிலேயே அவசரமாகக் கர வந்தபுரத்துக்குத் திருப்பி அனுப்பிவிட்டார் மகாமண்டலேசுவரர். மானகவசனும் தாமதமின்றி உடனே புறப்பட்டுவிட்டான். வருகிறபோது வந்ததுபோல் முன்சிறைப்பாதை வழியே சென்றான். சரியாக நடுப்பகல் நேரத்துக்கு முன்சிறை போய்விட முடியும். குதிரையை விரைவாகச் செலுத்தினால் அதற்கும் முன்னால் கூடப் போய்விடலாம். அந்த நேரத்துக்கு அங்கே போவதனால் ஒரு நன்மையும் இருக்கிறது. பகல் உணவை முன் சிறை அறக்கோட்டத்தில் அந்த வேடிக்கைத் தம்பதிகளின் உபசரிப்புக்கு இடையே சுவை நிறைந்ததாக முடித்துக் கொள்ளலாம். கணவனும், மனைவியுமாக ஒருவருக்கொருவர் கேலி செய்துகொண்டே அறக்கோட்டத்துக்கு வந்து செல்வோருக்கெல்லாம் அறுசுவை உணவோடு நகைச்சுவையும் அளிக்கும் அண்டராதித்தனையும், கோதையையும் நினைக்கும்போது அப்போதே அவர்களைக் கண்டுவிட்டது போன்றிருந்தது அவனுக்கு. கரவந்தபுரத்திலிருந்து முக்கியமான திருமுகத்தை அரண்மனைக்குக் கொண்டுவரும் அவசரத்தில் ஒரே ஒரு வேளை தான் அந்த அறக்கேட்டத்தில் தங்கிச் சாப்பிட்டிருக்கிறான் அவன். இருந்தும் அந்த ஒருவேளைப் பழக்கத்துக்குள்ளே அவர்கள் அவனுடைய மனத்தில் ஆழப் பதிந்திருந்தார்கள்.

‘குழந்தை குட்டிகள் இல்லாமல் வயது மூத்த அத்தத் தம்பதிகள் அதை ஒரு குறைவாக எண்ணிக் கவலைப் படுதாகவே தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ வருகிறவர்களையெல்லாம் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்த அவர்களால் முடிகிறது. அறக்கோட்டங்களும், அட்டிற்சாலைகளும் நடத்தினால் மட்டும் போதுமா? உலகம் முழுவதுமே சிரிப்பதற்கும், அன்பு செய்வதற்கும், உபசரிப்பதற்கும் ஏற்றது என்று எண்ணும் அண்டராதித்தனும், கோதையும் போன்ற ஆட்கள்தான் அறக்கோட்டத்தை அர்த்தமுள்ள தாக்குகிறார்கள். சேர, சோழ நாடுகளில் எத்தனை