பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

317

நடுச்சாமத்துக்குள்ளாக ஒருவாறு அவன் கரவந்தபுரத்தை அடைந்துவிட முடியும், வெயிலின் மிகுதியையும் வானில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மேகக் கற்பாறைகள் மிதப்பதையும் கண்டு மழை வந்து நடுவே பிரயாணத்தைத் தடைப்படுத்திவிடாமல் இருக்க வேண்டுமே என்று கவலையாயிருந்தது அவனுக்கு ஏதாவது ஊர்ப்புறத்தை ஒட்டிச் சென்று கொண்டிருக்கும் போது மழை வந்தால் குதிரையையும் கட்டிவிட்டு எங்கேயாவது தங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தொல்லைதான். முன்சிறையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை அந்தச் சாலையில் ஊர்கள் இடையிடையே வரும். அதன்பின் கரவந்தபுரம்வரை மலைச்சரிவிலும், அடர்ந்த காடுகளை வகிர்ந்துகொண்டு செல்கிறது சாலை, எதற்கும் கொஞ்சம் வேகமாகப் போவதே நல்லது என்ற எண்ணத்துடன் குதிரையை விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அவன். சாலையில் எந்த இடங்களில் சிறுசிறு ஊர்கள் இருந்தனவோ, அங்கெல்லாம்கூட அதிகமான கலகலப்பு இல்லை. எல்லோரும் முத்துக்குளி விழாவிற்குச் சென்றிருந்தார்களாதலால் ஊர்கள் அமைதியாக இருந்தன. அனேகமாக அந்தப் பெருஞ்சாலையில் சிவிகைகள், யானைகள், குதிரைகள், கால்நடையாகச் செல்வோர் என்று போக்குவரவு இருந்துகொண்டே இருக்கும். அன்றைக்கோ அதுவும் குன்றியிருந்தது. அவனுடைய குதிரைதான் சாலையை ஏகபோகமாக ஆக்கிரமித்துச் சுதந்திரமாகச் சென்று கொண்டிருந்தது. மாலையில் சிறு தூறல் இருந்தது. பெருமழையாகப் பெய்யாததால் அதனால் அவனுக்கு அதிக இடையூறு இல்லை. எங்கும் நிற்காமல் சென்றுகொண்டிருந்தான். ஆனால் இருட்டுகிற சமயத்துக்குச் சாலை மலைச்சரிவை ஒட்டிச்சென்று கொண்டிருந்தபோது மழை வலுவாகப் பிடித்துக் கொண்டுவிட்டது. மின்னலும் இடியுமாக மேகம் இருட்டிக்கொண்டு இயற்கையான இருளோடு கலந்து கருமைக்கு அழுத்தம் கொடுத்திருந்தது. வானப்பெருங்குளத்தின் வடிகாற்கண்களை யாரோ உடைத்து விட்டுவிட்ட மாதிரி மழை கொட்டியது. இருளில் வழி அறிவது கூட வரவரக்