பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

323

நுழைந்தால் ஒரு பெரிய கலவரமே உண்டாகிவிடும். அங்கே புவனமோகினி என்று ஒரு வண்ணமகள் என்னை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள். என் தலையை அந்தப்புரத்துக்குள் பார்த்துவிட்டால் வேறு வினையே வேண்டியதில்லை” என்று தொடங்கிப் புவனமோகினியின் மூலம் மகாமண்டலேசுவரர் தன்னைப்பற்றி உளவறிந்த விவரத்தைத் தளபதிக்கு விளக்கிக் கூறினான் அவன்.

“அப்படியானால் பகவதியை இப்போது இங்கே வரவழைத்துச் சந்திப்பதற்கு வேறு வழி?”

தளபதியின் கேள்விக்கு வழி சொல்ல வகையறியாமல் விழித்தான் குழைக்காதன். அவர்கள் இருவரும் தோட்டத்தில் எந்த இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்களோ, அந்த இட்மே அந்தப்புரத்துச் சுவரோரமாகத்தான் இருந்தது. மேல் மாடத்தில்தான் பகவதி, விலாசினி முதலிய பெண்கள் தங்கியிருந்தார்கள். மேன்மாடத்திலிருந்த அந்த அறை அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து நான்காள் உயரத்தில் இருந்தது. மேலே இருந்த அந்தப்புரத்து அறைகள் ஒவ்வொன்றின் நிலைக்கு மேலேயும் ஒரு சிறிய வெண்கல மணி தொங்கிக் கொண்டிருந்தது.

இருவரும் அந்த அறைகளை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, என்ன விதமாகப் பகவதியைச் சந்திப்ப்தென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

“எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. செய்து பார்க்கிறேன். நாம் நினைக்கிறபடி நடந்தாலும் நடக்கலாம். வேறு மாதிரி ஆகிவிட்டால் ஏமாற்றம்தான்” என்று முகம் மலர்ந்து கூறினான் மகர நெடுங்குழைக்காதன்.

“என்ன வழி அது?” தளபதியின் வினாவில் ஆவல்துள்ளி நின்றது.

“இருங்கள், இதோ செய்து பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே தலைக்கு மேலிருந்த மாமரத்தில் கைக்கெட்டுகிறாற்போலச் சரம் சரமாகத் தொங்கிக் கொண்டிருந்த மாவடுக்களில் நாலைந்தைப் பறித்தான்.