பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

31


மகாமன்னரான பராந்தக பாண்டியரின் வழி முறையினர்தான் உங்களை ஆள வேண்டுமென்ற உறுதி உங்களுக்கு இருக்குமானால் இலங்கைத் தீவுக்குப் போய் இளைய சக்கரவர்த்தியைத் தேடிக்கொண்டு வாருங்கள். தளபதி ! இந்த ஒலையை இப்போது நான் படிக்க விரும்பவில்லை. இது உம்மிடமே இருக்கட்டும்.”

உருக்கம் நிறைந்த நீண்ட பேச்சுக்குப் பின் திருமுக ஒலையை வல்லாள தேவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் மகாராணி. பேச்சு முடிந்த பின்பும் அங்கு நிலவிய அமைதி கலை யவில்லை. அதங்கோட்டாசிரியரும் பவழக்கனிவாயரும், தளபதியும் ஒன்றும் பேசத் தோன்றாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆலயத்தில் எரிந்து கொண்டிருந்த தீபச் சுடர்கள் கூட ஆடாமல் ஸ்தம்பித்துப் போனவை போல விளங்கின. திருமுக ஒலையைக் கையில் வாங்கிக் கொண்ட தளபதி மகாராணியார் மனம் வெதும்பி விரக்தியடைந்துப் போயிருக்கும் அந்த நிலையில் என்ன பேசுவதென்று தெரியாமல் மலைத்துப்போய் அப்படியே நின்றான்.

“தளபதி! நாளையே புறத்தாய நாட்டு மகாசபையைக் கூட்டுங்கள். இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். நாஞ்சில் நாட்டுக் கூற்றங்களின் பிரதம மந்திராலோசனைத் தலைவராகிய இடையாற்று மங்கலத்து நம்பியை அழைத்து வாருங்கள். இந்த ஒலையையும், இது சம்பந்தமான எதிரிகளின் சூழ்ச்சிகளையும் கூட நாளை மகா சபைக்கூட்டத்தில் ஆலோசித்துக் கொள்ளலாம். இப்போது நாம் புறப்படலாம்” என்று மீண்டும் உறுதியான குரலில் கூறினார் மகாராணி. அப்போது கோயில் வாயிலில் பரிவாரத்து வீரர்களில் முக்கியமான ஒருவன் தளபதியின் காதருகே வந்து, “பிரபு! நீங்கள் எங்களிடம் ஒப்படைத்திருந்த அந்த ஒற்றன் தப்பிவிட்டான்” என்று மெல்லிய குரலில் கூறினான். தளபதி வல்லாளதேவன் திடுக்கிட்டான்.