பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

“என்ன அண்ணா! புதிர் போடுகிறீர்கள்?’ என்றாள் பகவதி.

“இப்போதைக்கு அது புதிர்தான்! புதிரை விளக்கிக் கொண்டு வரத்தான் நீ உடனடியாகப் புறப்படவேண்டும். மிகப் பெரிய அந்தரங்கங்களெல்லாம் இந்தப் புதிருக்குள்தான் அடங்கிப்போயிருக்கின்றன!”

அந்தப் பேச்சிலிருந்து எதுவும் விளங்கிக்கொள்ள முடியாமல் குழப்பத்தோடு அண்ணன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பகவதி. அவனுடைய கண்களில் துணிவின் ஒளி, உறுதியின் சாயை இரண்டையும் அவள் கண்டாள். செய்தே தீரவேண்டிய செயல்களைப் பற்றிப் பிடிவாதமாகப் பேசும்போது அண்ணனுடைய கண்களில் அந்த ஒளியை அவள் கண்டிருக்கிறாள்.

“மென்மையான உன்னுடைய கைகளிலிருந்து வன்மையான செயல்களை எதிர்பார்க்கிறேன், பகவதி வளை சுமக்கும் கைகளில் பொறுப்பைச் சுமத்த முடியுமா என்று தயங்குகிறேன்!”

"உங்கள் தங்கையின் கைகள் அதற்குத் தயங்கப் போவதில்லை, அண்ணா!”

“இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து வரவழைப்பதற்கு இத்தனை பேச்சும் பேசவேண்டியிருந்தது. இனிமேல் கவலை இல்லை.”— இவ்வாறு கூறிவிட்டுத் தன் தங்கைக்கு மிக அருகில் நெருங்கிக் காதோடு காதாக மெல்லிய குரலில் ஏதோ கூறத்தொடங்கினான் தளபதி வல்லாளதேவன்.

அவன் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தபோதே அவள் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளின் நிழல்கள் படிந்து மறைந்தன. நெடுநேரமாக அவள் காதருகில் அவனுடைய உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. வண்டு பூவைக் குடையும் ஒசையைவிட மிக மெல்லிய ஓசையில் பேசுவதற்குத் தென் பாண்டி நாட்டுத் தளபதி எங்கே கற்றுக் கொண்டிருந்தானோ?

பகவதியின் முகபாவங்கள் விநாடிக்கு விநாடி அவன் சொற்களைப் புரிந்துகொண்டதற்கு ஏற்ப மாறுபடும்போது எத்தனை எத்தனை உணர்ச்சிக் குழப்பங்களை அந்த வனப்பு