பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

329

மிக்க நெற்றியில் காண முடிகிறது? பிறைச் சந்திரனைக் கவிழ்த்து வைத்தாற்போன்ற நெற்றி அது. தன் தங்கையிடம் அற்புதமான அழகும், வனப்பும் அமைந்திருப்பதாகப் பெருமைப் பட்டதைக் காட்டிலும், துணிவும் சாமர்த்தியமும் பெருக வேண்டுமென்பதற்காகத்தான்அதிகக் கவலைப்பட்டிருக்கிறான் வல்லாளதேவன். அந்தக் கவலையும் அவன் இப்போது கூறிய செயலைச் செய்ய அவள் ஒப்புக் கொண்டதால் அகன்றுவிட்டது.

எல்லாவற்றையும் அவள் காதில் இரகசியமாகக் கூறி விட்டுத் தலை நிமிர்ந்தபோது, மேலேயிருந்து சற்றுப் பெரிதான மாவடு ஒன்று தளபதியின் நெற்றிப் பொட்டில் விழுந்தது. விண்ணென்று தெரித்து விழுந்த அது உண்டாக்கிய வலியில் ஒருகணம் கண் கலங்கிவிட்டது அவனுக்கு.

“ஐயோ, அண்ணா 'வடு’ப் பட்டுவிட்டதே?” என்று அவன் நெற்றியைத் தடவ நெருங்கினாள் பகவதி.

“அதனாலென்ன? இங்கே வடுப்பட்டால் கவலை இல்லை. நீ போகிற காரியம் வடுப்படாமல் பார்த்துக்கொள் பகவதி!” என்று கூறிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான் அவன்.


7. கடலில் மிதந்த கற்பனைகள்

டிவானத்து விளிம்பு கடற்பரப்பைத் தொடுமிடத்தில் சிறிதாய், இன்னும் சிறிதாய், மிகச் சிறியதாய் அந்தக் கப்பல் மறைகின்றவரையில் செம்பவழத்தீவின் கரையோரத்து மணல் திடலில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதிவதனி, இன்னும் அந்தச் சங்கொலி அவளுடைய செவிகளில் புகுந்து மனத்தின் பரப்பெல்லாம் நிறைப்பது போலிருந்து. பருகுவதற்குத் தண்ணிரே கிடைக்காத பாலை நிலத்தில் பயணம் செய்யப்போகிறவன் சேகரித்து வைத்துக் கொள்ளுகிறமாதிரி அந்த ஒலியையும், அதற்குரியவனின் அழகிய முகத்தையும் மனச் செவிகள் நிறைய, மனக் கணகள் நிறையச் சேகரித்து