பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

333

தெரியுமே, இந்தக் கதை?”— பெரியவர் மறுபடியும் அவளிடம் விவாதித்தார்.

"தெரியாது, அப்பா! தெரிந்துகொள்ளவும் ஆசை இல்லை.” அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பும் எல்லைக்குப் போய்விட்டது அவள் குரல்.

“அண்ணா! இதென்ன? நீங்களும் அவளுக்குச் சரியாகப் பேச்சுக் கொடுத்துகொண்டு நின்றால் என்ன ஆவது?” என்று மதிவதனியின் அத்தை கூப்பாடு போட்ட பின்பே அவரும் தம்முடைய பேச்சை நிறுத்தினார்.

முகத்தை மூடிக்கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாள் மதிவதனி, அந்தப் பெரியவர்களுக்கு அவளை எப்படித் திருப்தி செய்வதென்றே திகைப்பாகிவிட்டது. நயமாகவும், பயமாகவும் அவள் அழுகையைத் தணித்து வழிக்குக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு அவள் ஒரே குலக்கொழுத்து, செல்லப்பெண். அந்தப் பெரியவர் வாழ்க்கையில் பல துயர அனுபவங்களைக் கண்டவர். இதோ வளர்ந்து பெரியவளாகி மதிவதனி என்ற பெயருடன் நிற்கும் இப்பெண் சிறு குழந்தையாக இருக்கும்போதே தாயை இழக்க நேரிட்டது. குழந்தைக்குத் தாய்மைப் பேணுதல் மட்டும்தான் இல்லாமற்போய்விட்டது. ஏறக்குறைய அதே சமயத்தில் பக்கத்துத் தீவில் ஒரு பரதவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்த அவருடைய இளைய சகோதரி அமங்கலியாகி அண்ணனைத் தேடிக் கொண்டு பிறந்தவீடு வந்து சேர்ந்தாள். இந்த இரண்டு துன்பங்களும் அவருக்கு வாழ்க்கையிலேயே பெரிய அதிர்ச்சிகள்.

தங்கை வீட்டோடு இருந்து அவருடைய பெண் குழந்தையைப் பேணி வளர்த்து விட்டாள். அத்தையின் ஆதரவில் மதிவதனி வளர்ந்து உருவாகிவிட்டாள். கண்டிப்பும், கண்காணிப்பும் அதிகமாக இருந்தாலும் அவளுடைய கண் கலங்கினால் மட்டும் அவர்களால் பொறுக்க முடியாது.

“மதிவதனி! உனக்கு நல்ல கைராசி இருக்கிறது. நீ போய் உட்கார்ந்து வியாபாரம் செய்தால் கடையிலும் நன்றாக விலை போகிறது. இன்றும் நீயே கடையில்போய் இரு நான் வேறு