பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. இடையாற்றுமங்கலம் நம்பி

ந்தக் கதையை மேலே தொடர்வதற்கு முன்னால் பன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்பாண்டி நாடாகிய நாஞ்சில் நாட்டின் பல்வேறு உட்பிரிவுகளைப் பற்றி இங்கே ஒரு சில செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது.

தோவாழைக் கூற்றம், மருங்கூர்க் கூற்றம், பொன்மனைக் கூற்றம், அருவிக்கரைக் கூற்றம், பாகோட்டுக் கூற்றம் ஆகிய ஐந்து பெருங்கூற்றங்களாக நாஞ்சிற் புறத்தாய நாடு பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கூற்றத்துக்கும் பாண்டியர் ஆட்சியை மேற்பார்க்கும் இராஜப் பிரதிநிதியாக ஒரு தலைமகன் நியமிக்கப்பட்டிருந்தான். இந்தக் கூற்றத் தலைவர் களின் தொகுதிக்கு நாஞ்சில் நாட்டு மகாசபை என்று பெயர். இந்த மகாசபையின் மந்திராலோசனைத் தலைவராக அறிவினும், திருவினும், ஒழுக்கத்தினும், வயதினும் மூத்த சான்றோர் ஒருவரைப் பாண்டிய மன்னன் தானே தேர்ந்தெடுத்து நியமிப்பது வழக்கம். அவருக்குப் புறத்தாய நாட்டு மகாமண்டலேசுவரர் என்று பெயர்.

திரிபுவனச் சக்கரவர்த்திகளாகிய பராந்தக பாண்டிய தேவர் காலத்தில் பாண்டிய சாம்ராஜ்யம் வடக்கிலும் தெற்கிலும் பெரிதாகப் பரந்திருந்ததாலும் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த அவரால் தென்கோடி மூலையிலுள்ள நாஞ்சில் நாட்டை நேரடியாகக் கவனித்து ஆள முடியாததாலும் இந்த ஏற்பாட்டைச் செய்தார். இந்த ஏற்பாட்டின்படி மருங்கூர்க் கூற்றத்து இடையாற்றுமங்கலம் நம்பி என்ற நாஞ்சில் நாட்டு மேதை மகாமண்ட்லேசுவரராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பராந்தகச் சக்கரவர்த்திகள் ஆண்ட இருபதாண்டுக் காலமும் அதன் பின்பும் இடையாற்றுமங்கலம் நம்பியே தொடர்ந்து அம்மாபெரும் பொறுப்பை நிர்வகித்து வந்தார். சக்கரவர்த்திகள் தேகவியோக மடைந்து, அமரரான பின்பு