பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

347


நாட்டின் பயங்கரமான சூழ்நிலையை விளக்க அண்ணன் உதாரணமாகக் கூறிய துன்பக் கதையை நினைத்துக் கொண்டபோது அவனுடைய கதை கூறும் திறமையை எண்ணிச் சிரிப்பு வந்தது அவளுக்கு எவ்வளவு இரகசியமாக எவ்வளவு நம்பிக்கையோடு அண்ணன் இந்தக் காரியங்களை அவளிடம் ஒப்படைத்துப் போயிருக்கிறான்? இதை எண்ணும் போது மட்டும் ஈடில்லாத பெருமிதத்தை அடைந்தாள் பகவதி, எல்லாப் பொறுப்புகளையும் தன்னுடையதாக இழுத்துப் போட்டுக்கொண்டு செயலாற்ற முந்தும் ஒரு வீரனுக்கு உடன் பிறந்தவள்தான் அப்படிப்பட்ட பெருமிதத்தை அடையலாம்.

அவள் தோட்டத்துக்குப் போய்விட்டுத் திரும்பிவந்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஆசிரியர் மகள் விலாசினி அவளைத் தேடிக்கொண்டு வந்தாள். -

“என்னடியம்மா! திடீரென்று உன்னை இங்கே காணவில்லை? சிறிது நேரத்துக்கு முன்னால் இங்கு வந்தேன். நீ இல்லாததால் திரும்பிப் போய் விட்டேன்” என்றாள் விலாசினி.

“அதங்கோட்டாசிரியர் பிரானின் அருமைப் புதல்வியார் தேடிக்கொண்டு வரபோகும் விவரம் முன்பே தெரிந்திருந்தால் நான் இந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கவே மாட்டேன். மன்னித்தருள வேண்டும்” என்று சிரிக்காமல் பேசினாள் அவள். விலாசினி செல்லமாகக் கோபித்துக் கொள்வதுபோல் பகவதியை உறுத்துப் பார்த்தாள்.

“போதும், கேலிப் பேச்சு! சற்றுமுன் எங்கே போயிருந்தாய்

“கேட்கிற கேள்வியைப் பார்த்தால் உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நான் எங்கும், எதற்கும் போய்விட்டு வரக்கூடாது போல் அல்லவா இருக்கிறது?” என்றாள் பகவதி வியப்புடன். “போ போ! நன்றாகப் போய்விட்டுவா. எனக்கென்ன வந்தது? உன்னைப் போகக்கூடாது என்று.தடுக்க நான் யார்? மகாராணி உன்னைப் பார்த்துக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்கள். அதனால்தான் வந்தேன்!"