பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

33


வடபாண்டி நாட்டைச் சோழனும், அவனோடு சேர்ந்தவர்களும் கைப்பற்றிக் கொண்டதும், குமார சக்கரவர்த்தி இராசசிம்மன் இலங்கைத் தீவுக்கு ஓடியதும் நேயர்கள் ஏற்கெனவே அறிந்த செய்திகள். அந்தப் பயங்கரமான சூழ்நிலையின்போது மகாராணி வானவன்மாதேவியாரைத் தென்பாண்டி நாட்டுக்கு அழைத்து வந்து புறத்தாய நாட்டுக் கோட்டையில் இருக்கச் செய்து மகாராணிக்கு அளிக்க வேண்டிய இராஜ கெளரவமும் மரியாதையும் அளித்தவர் மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பி அவர்களே.

நாஞ்சில் நாட்டின் உயிர்நாடி போன்ற பகுதி மருங்கூர்க்கூற்றம், கன்னியாகுமரி, சுசீந்திரம், தானுமாலய விண்ணகரம், தென்திசைப் பெரும் படை தங்கியிருக்கும் கோட்டாற்றுப் படைத்தளம், புறத்தாய நாட்டுக் கோட்டை, மகாமண்டலேசுவரரின் வாசஸ்தலமாகிய இடையாற்று மங்கலம் ஆகிய எல்லா முக்கிய இடங்களும் மருங்கூர்க் கூற்றத்திலேயே அமைந்திருந்தன. பார்க்குமிடமெங்கும் பரந்து கிடக்கும் நெல் வயல் வெளிகளும், சாலைகளும் நிறைந்த மருங்கூர்க் கூற்றத்தின் பசுமை வெளியில் இரட்டை வடமாகிய முத்துமாலையொன்றை நெளியவிட்டதுபோல் பஃறுளியாறு என முதற் சங்கக் காலத்து அழைக்கப்பட்ட பறளியாறும், புத்தனாறும் பாய்ந்து ஒடுகின்றன.

பறளியாறும், புத்தனாறும் கடலோடு கலக்கும் சங்கம முகத்துவாரத்துக்கு முன்னால் தனித்தனியே விலகிப் பிரிந்து ஒரு சிறிய அழகான தீவை உண்டாக்கியிருக்கின்றன. அதுவே இடையாற்று மங்கலம். தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரும், முதுபெரும் பேரறிஞருமாகிய நம்பியின் மாளிகை இந்தத் தீவில்தான் அமைந்திருந்தது. இந்தத் தீவின் பெரும்பாகத்தை நிரப்பிக் கொண்டு நின்றது மகாமண்டலேசுவரரின் கம்பீரம்ான மாளிகைதான் என்றால் அது எவ்வளவு பெரிதாக இருக்குமென்பதை நேரில் பார்க்காமலே கற்பனை செய்துகொள்ள முடியும். மலைத்