பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 35i

“என்னடி பகவதி நான் கேட்கிறேன். பதில் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாய்?”

பகவதி அவளுடைய கேள்விக்கு பதிலே சொல்லாமல் பேச்சை வேறு திசையில் மாற்றிப் பார்த்தாள். ஆனால் அவள் விடவில்லை. பகவதியைத் துளைத்தெடுத்து விட்டாள்.

“இடையாற்றுமங்கலத்துப் பெண்ணைப்பற்றித் தெரியாமல் உன்னிடம் சொல்லிவிட்டேனடி. அம்மா! நீ என்னைத் துண்டித்துருவிக் கேள்வி கேட்டு வாயைப் பிடுங்காதே!” என்று சிறிதளவு கடுமையான குரலில் எரிந்து விழுந்தாள் பகவதி. விலாசினிக்கு முகம் சுண்டிவிட்டது. பேசுவதற்கு ஒன்றும் தோன்றாமல் வாயடைத்துப்போய் நின்றாள் அவள். அந்த நிலையில் பகவதியோடு அங்கிருப்பதற்கே பிடிக்கவில்லை அவளுக்கு. -

“நான் அப்புறம் வந்து சந்திக்கிறேன்! இப்போது உன் மனநிலை சரியில்லை போலிருக்கிறது” என்று சொல்லி விட்டு அங்கிருந்து போய்விட்டாள். “விலாசினி! மனநிலையெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. நீ போகாதே, சிறிது நேரம் இரு; பேசிக்கொண்டிருக்கலாம்” என்று பகவதி கூப்பிட்டும் அதைக் காதில் வாங்கிகொள்ளாதவள் போல் நிற்காமல் போய்விட்டாள் அவள். -

“அடாடா! வீணாக இவள் மனத்தைப் புண்படுத்தி விட்டேனே” என்று உள்ளுற வருந்தினாள் பகவதி. பின்பு ஏதோ ஒரு திட்டமான முடிவுக்கு வந்தவள் போன்ற முகபாவத்துடன் தான் தங்கியிருந்த அந்தப்புரப் பகுதியின் அறைக்கதவை உட்புறமாக அடைத்துத் தாழிட்டாள்.

அப்படிக் கதவு அடைத்துத் தாழிடப்படுவதைக் கீழே தோட்டத்து வழியாக இறங்கிப் போய்க் கொண்டிருந்த விலாசினி பார்த்துவிட்டுப் போனாள். “இருந்தாற் போலிருந்து பகவதிக்கு என்ன வந்துவிட்டது?” என்ற சிந்தனைதான் அவள் உள்ளத்தில் போகும்போது புரண்டுகொண்டிருந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பின் தன் தந்தை அதங்கோட்டாசிரியரைச் சந்தித்தபோது அவள் அதையும் மறந்துவிட நேர்ந்தது.