பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

359

நிறுக்கும் பொன் வணிகனைப்போல் மகாமண்டலேசுவரர்தான் ஒரு சொல் மிகாமல், ஒரு சொல் குறையாமல், அளந்து எண்ணி அளந்து பேசுவார் என்றால் அவருடைய புதல்வி அவரைக்காட்டிலும் அழுத்தமாக இருக்கிறாளே?’ என்று அவன் மனத்துக்குள் நினைத்துக் கொண்ட நினைப்பின் சாயைதான் சிரிப்பாக வெளிப்பட்டு மறைந்தது.

“என்னிடம் எதையெல்லாமோ கேட்டு நேரத்தைக் கடத்துகிறீர்களே தவிர, என் தந்தை உங்களிடம் கூறி அனுப்பியிருப்பதாகச் சொன்ன முக்கியச் செய்திகளைப் பற்றி நீங்கள் கூறப்போவதாகவே தெரியவில்லையே?”

“அவற்றை இந்த அகால நேரத்தில் இங்கு நான் விவரித்துக் கொண்டிருப்பதைத் காட்டிலும் நீங்களே படித்துத் தெரிந்துகொள்வது நல்லது. உங்கள் தந்தை உங்களுக்குகென்று அந்தரங்கமாக எழுதி அனுப்பியிருக்கும் விரிவான திருமுகத்தை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகிறேன். அதைப் படித்து எல்லாவற்றையும் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். நாளைக் காலையில் விடிந்ததும் உங்களைச் சந்திக்கிறேன்.”

சேந்தன் மகாமண்டலேசுவரரின் அந்தரங்கத் திருமுகத்தை அவளிடம் எடுத்துக்கொடுத்துவிட்டுத் தூங்கச் சென்று விட்டான்.

மனத்தில் பெருகும் ஆவலையும், பரபரப்பையும் அடக்கிக் கொண்டு அந்தத் திருமுகச் சுருளோடு தன் தனியறைக்குச் சென்றாள் குழல்வாய்மொழி. அதைப் படித்து அறிந்து கொள்வதற்கு முன் அவள் மனத்தில் பல்வேறு உணர்ச்சிகள் தடுமாறின. தந்தை என்ன எழுதியிருப்பாரோ என்று எண்ணும்போதே பயம், பதற்றம், வியப்பு அத்தனையும் அவளைப் பற்றிக்கொண்டன. அவள் இருந்த அறை அவளுடைய கன்னிமாடத்தின் மேற்பகுதியில் ஒதுக்குப்புறமாக இருந்தது. அவளுடைய அணிகலன்கள், அலங்காரப் பொருள்கள், இசைக் கருவிகள் இவையெல்லாம் மறைந்திருந்த அந்தத் தனியறையில் பிறர் அதிகம் பழக முடியாது. பணிப் பெண்கள் வண்ணமகளிர்கூட முன் அனுமதியின்றி அந்த அறைக்குள்ளே வரக்கூடாது.