பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பாண்டிமாதேவி / முதல் பாகம்


அவதிப்படவேண்டியதில்லை. மாளிகைத் தோணியுடன் அதைச் செலுத்தும் வேளான் காத்திருப்பான். இரவில் அகால வேளையில் வர நேர்ந்ததால்தான் இவ்வளவு துன்பமும்.

‘சரி எதற்கும் தோணித்துறை வரையில் போய்ப் பார்க்கலாம். நம்முடைய நல்வினைப் பயனாக அம்பலவன் வேளானும் அவன் தோணியும் இக்கரையில் இருந்தால் நல்லதாகப் போயிற்று’ என்று நினைத்துக் கொண்டே கரையோரத்துப் புதர் மண்டிய பாதையில் மேற்கே தோணித் துறையை நோக்கி நடந்தான் தளபதி, ஒற்றையடிப் பாதையின் இருபுறமும் அடர்த்தியான தாழம்புதர் இருக்குமிடம் தெரியாமல் மலர்ந்திருந்த தாழம் பூக்களின் மணமும், நதிக்கரைக் குளிர்ச்சியும், நிலாவின் இன்பமும், தளபதியின் மனத்துக்கோ உடலுக்கோ சுகத்தை அளிக்கவில்லை. கவலை நிறைந்த சூழ்நிலையில் கடமையை நோக்கி ஒடிக் கொண்டிருந்தான் அவன்.

கன்னியாகுமரிக்கோவிலிலிருந்து மகாராணியார், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர், பகவதி, விலாசினி எல்லோரையும் பரிவாரங்களோடு அரண்மனைக்கு அனுப்பிவிட்டு, தப்பிச் சென்ற ஒற்றனைத் தேடிப் பிடிப்பதற்காகத் தளபதியும் வேறு சில வீரர்களும் அங்கேயே தங்கிவிட்டனர்; மகாராணி மனக்குழப்ப மடைந்திருக்கும் நிலையைப் புரிந்து கொண்டதால் கடற்கரைப் பாறைகளிடையே, தான் கண்ட ஒற்றர்களைப் பற்றியோ, அவர்களில் ஒருவனைப் பிடித்துக் கொண்டு வந்ததைப் பற்றியோ அவன் கூறவில்லை. ஒலையை மட்டும் கொடுத்தான்; அதையும் அவர் படிக்காமலே திருப்பிக் கொடுத்து விட்டார்; மகாராணி முதலியோர் கோட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது தன் காதருகே வந்து பரிவாரத்து வீரன் ஒற்றன் தப்பியதாகக் கூறிய செய்தியையும் அவன் யாருக்கும் அறிவிக்கவில்லை.

“மகாராணி! நீங்கள் எல்லோரும் கோட்டைக்குப் போய் இருங்கள், எனக்கும் இந்த வீரர்களுக்கும் இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது. உங்கள் உத்தரவுப்படியே நாளை