பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


நாட்டுக்குத் தேவியாயிருக்க முடிகிறது. மனத்தின் உலகத்திலோ ஏழையிலும் ஏழைபோல வெறுமை சூழ்கிறது. ஒரே சுவைக் கலப்பற்ற தனிமை உள்ளும் புறமும் நினைவும் கனவும், எங்கும், எதுவும் சூனியமாய்ப் பாழ்வெளியாய்ப் போய்விட்டது போன்ற தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் தனிமை அது. ஏழை கந்தல் துணிகளை இழுத்துப் போர்த்திக் குளிரைப் போக்கிக்கொள்ள முடியாததுபோல் வலுவில்லாத நினைவுகளால் மனத்திடம் கிட்டமாட்டேனென்கிறது.

மகாராணி அந்தப் பெரிய மாளிகையில் சிறிதும் நிம்மதியின்றி இருந்தார். குமார பாண்டியனைப் பற்றிய நினைவுகள், நாட்டின் எதிர்காலம் போர் வருமோ என்ற பயம் எல்லாம் ஒன்றாய்க் கூடி நின்று, ‘ஒடு! ஒடு!” என்று அந்தத் தனிமையிலிருந்து எங்கோ துரத்துவதுபோல் இருந்தது. சொற்களின் பொருள் வரம்புக்குள் இழுத்துப் பிடித்து விளக்கமுடியாத ஒரு தாபம்-ஆத்மதாபம், அகன்ற மாளிகையின் நீண்ட இடங்களைக் கடந்து உயர்ந்த மதில்களுக்கு அப்பால் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்விட வேண்டும் என்று உந்தித்தள்ளுவதுபோல் உள்ளத்தில் குமிழியிட்டது.

“தேவி! உணவருந்துவதற்கு எழுந்தருள வேண்டும்” என்று ஒரு பணிப்பெண் வந்து அழைத்தாள். மகாராணி பதில் சொல்லவில்லை!

“நீ போய் வண்ணமகள் புவனமோகினியை வரச்சொல்” பணிப்பெண் உணவருந்துவதற்கு அழைத்ததையே காதில் போட்டுக்கொள்ளாமல் அவளை வேறொரு பணிக்கு ஏவினார் மகாராணி. சிறிது நேரத்தில் வண்ணமகள் வந்தாள். ‘புவனமோகினி! நான் உடனே தர்ணுமாலய விண்ணகரத்துக்குப் புறப்பட வேண்டும். சுசீந்திரத்துக்குச் சிவிகை ஏற்பாடு செய். நீயும் உடன் வரவேண்டும்.”

முன் தகவல் இல்லாமல், உணவருந்தாமல், திடீரென்று இப்படி மகாராணி கோவிலுக்குப் புறப்படவேண்டுமென்று கூறியதைக் கேட்டுப் புவனமோகினி திகைத்தாள்.