பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

37


மகாசபைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன். இன்றிரவே இடையாற்று மங்கலத்தில் நம்பியைச் சந்தித்து விவரம் கூறிவிடுகிறேன். மற்றக் கூற்றத் தலைவர்களுக்கும் இரவோடிரவாக ஆள் அனுப்பி விடுகிறேன்” என்று கூறினான் தளபதி !

“அப்படியானால் இன்றிரவு நீ கோட்டைக்கு வருவது சந்தேகந்தான். இவ்வளவு வேலைகளையும் செய்ய இரவு முழுவதும் சரியாயிருக்கும்!” என்றார். அதங்கோட்டாசிரியர்.

“எங்கே வரமுடியப் போகிறது? நீங்கள் போய் வாருங்கள், ஒரு வேளை இடையாற்று மங்கலத்திலிருந்து விரைவில் திரும்பினால் உடனே கோட்டைக்கு வந்து விடுகிறேன்” என்று சொல்லித் தளபதி அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் சென்றதும் பிடிபட்ட ஒற்றனை அஜாக்கிரதையாய் தப்ப விட்டு விட்ட வீரர்களைத் திட்டினான். கோபத்தோடு கடிந்து கொண்டான். மறுபடியும் அவர்களை அழைத்துக் கொண்டு பாறை இடுக்குகளிலும், கடலோரத்து இடங்களிலும் கோவிலைச் சுற்றியும் தேடினான். ஏற்கெனவே தளபதியால் அடிபட்டு மயங்கி விழுந்திருந்தவனையும் இப்போது அந்தப் பாறைமேல் காணவில்லை. மூன்று பேர்கள் வந்திருக்கிறார்கள். வேலை எறிவதற்காக ஒருவன் கோவில் மேல்தளத்தில் ஏறிக் காத்திருக்கிறான். மற்ற இருவரும் பாறை இடுக்கில் இருந்திருக்கிறார்கள். - நடந்தை ஒருவாறு உணர முடிந்தது அவனால்.

“எப்படியானால் என்ன? மூன்று பேர்களுமே தப்பி விட்டார்கள்! நமக்குக் கிடைத்தது இந்த ஒலை ஒன்றுதான்” என்று மேலும் தேடும் முயற்சியைக் கைவிட்டு விட்டு இடையாற்றுமங்கலம் புறப்பட்டான் வல்லாளதேவன். தன்னோடு இருந்த வீரர்களை மகாசபையின் ஐந்து கூற்றத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே மறுநாள் கூடும் சபையைப் பற்றிய செய்தியைத் தெரிவிக்குமாறு இரவோடிரவாக அங்கிருந்தே குதிரைகளில் அனுப்பினான்.