பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

389


வந்தவள்போலத் தோன்றும்படி ஒரு தூண் ஒரமாக ஒதுங்கி ஒடுங்கி நின்றாள். பாண்டிநாட்டின் மாபெருந் தாய்போன்ற அந்தத் தேவியின் மனம் எங்கோ ஒரு சிறிய ஊரில் கோவிலில் தொண்டு செய்யும் அர்ச்சகரின் மனைவியான மற்றொரு தாய்க்காக நெகிழ்ந்து உருகியது. உலகத்தில் எங்குமே எதற்காகவும் தாய்க்குலம் மனவேதனைப்படக் கூடாதென்கிற மாதிரி ஒரு பரந்த கருணை அந்த மகாராணியின் நெஞ்சில் அந்தச் சில கணங்களில் வந்து நிறைந்துகொண்டது. ஒரு தாயின் துன்பத்தை உணர இன்னொரு தாய். ஆகா! உலகத்துத் தாய்க் குலத்தின் இணையற்ற பெருமை அது.

அர்ச்சகரும், புவனமோகினியும் எப்படியோ அந்தச் கோழியநங்கையை அழைத்து வந்துவிட்டனர். அவளைச் சுற்றி ஒரு சிறு கூட்டமும் வந்தது. அழுது அழுது சிவந்த கண்கள், வெளிறிய முகம், கலைந்த கூந்தல், முகம் முழுவதும் தன் மகனின் உயிர் காப்பதற்கு வீறுகொண்டெழுந்த தாய்மை வெறி, “பார்! இதுதான் உலகத்தில் தாய்மைத் துடிப்பின் உண்மை ஒவியம்” என்று எழுதி ஒட்டியிருப்பது போன்ற முகம் அவளுக்கு, அவளைச் சுற்றிலும் பைத்தியத்தைப் பார்க்க வருவதுபோல் தொடர்ந்து வந்த கூட்டத்தை அர்ச்சகர் ஏதோ சொல்லி அதட்டி விரட்டினார்.

அந்தத் தாயும், அர்ச்சகரும் புவனமோகினியும், மகாராணி நின்றுகொண்டிருந்த துணுக்கு அருகே வந்தனர். அர்ச்சகரையும், புவனமோகினியையும் ஒதுங்கிச் செல்லுமாறு குறிப்புக் காட்டிவிட்டு அவளை நோக்கி, “வா அம்மா! உன் துன்பத்தைக் கேள்விப்பட்டேன். என் மனம் பெரிதும் கலங்கியது. எனக்கு மட்டுமில்லை, அம்மா! உலகத்துத் தாய்மார்களெல்லாரும் துன்பப்படவே பிறந்திருக்கிறோம். இந்த நாட்டு மகாராணி வானவன்மாதேவியைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். அவர் கூடத் தம் மகனை எண்ணித் தான் ஓயாமல் கலங்கிக்கொண்டிருக்கிறார். நாம் என்ன செய்வது? நாம் பெற்ற பிள்ளைகள் அசடுகளாக இருந்து விட்டால் அவைகளுக்கும் சேர்த்து நாம்தான் வருத்தப்பட வேண்டியிருக்கிறது” என்று, தாம் இன்னாரெனக் காட்டிக்