பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

397


உமக்கும் நீதி மன்றத்தின் தலைவருக்கும் தவிர வேறெவர்க்கும் தெரிய வேண்டாம்.”

சிறிய மகரமீன் இலச்சினையோடு கூடிய அந்த மோதிரத்தைப் பயபக்தியோடு இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார் அர்ச்சகர்.

“காரியம் முடிந்ததும் மோதிரம் பத்திரமாக எனக்குத் திரும்பி வந்து சேர்ந்துவிடவேண்டும்.”

“அப்படியே செய்கிறேன், தேவி!” என்றார் அர்ச்சகர்.

“புவனமோகினி! இனி நமக்கு இங்கு வேலை இல்லை. வா. நாம் போகலாம்” மகாராணி புவனமோகினியை உடன் அழைத்துக்கொண்டு சிவிகையில் ஏறுவதற்காக வெளியேறினார். அர்ச்சகர் முத்திரை மோதிரத்தோடு கைமுக்கு மண்டபத்துப் பக்கம் சென்றார்.


15. ‘யாரோ ஒர் இளைஞன்’

தன் தந்தையினிடமிருந்து நாராயணன் சேந்தன் கொண்டு வந்த அந்தரங்கத் திருமுகத்தைப்படித்த மறுநாள் காலையிலே குழல்வாய்மொழி திருமுகத்தில் கண்ட கட்டளையை நிறைவேற்றுவதற்குப் புறப்பட்டுவிட்டாள். நாராயணன் சேந்தன் அவளோடு துணையாகச் சென்றான். தாங்கள் புறப்பட்டுச் செல்லும் செய்தி இடையாற்றுமங்கலம் மாளிகையை விட்டு வெளியே பரவிவிடாமல் எச்சரிக்கையும், ஏற்பாடும் செய்து விட்டுத்தான் புறப்பட்டிருந்தார்கள் அவர்கள். ‘மகாமண்டலேசுவரருடைய ஏற்பாட்டின்படி தாங்கள் இருவரும் குமார பாண்டியனைத் தேடிக்கொண்டு செல்வது எவருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்று கருதியதனால்தான் அவர்கள் அதில் அவ்வளவு கண்டிப்பாக இருக்கும்படி நேர்ந்தது.

விழிஞம் துறைமுகத்துக்குப் போய் அங்கிருந்து தனியாக ஒரு கப்பல் ஏற்பாடு செய்துகொண்ட பின் பயணத்தை மேலே தொடர வேண்டுமென்பது அவர்கள் திட்டம்.