பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


காத்துக்கொண்டிருந்தான். மேற்றிசைத் தேசங்களிலிருந்து குதிரைகளும், மதுவகைகளும் கொண்டுவந்து இறக்குமதி செய்யும் கப்பல்கள் இரண்டு மூன்று சேர்ந்தாற்போல் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருந்ததனால் அன்றைக்கு அதிகமான கலகலப்பு இருந்தது. கீழ்த்திசை தீவுகளிலிருந்து கற்பூரம் கண்ணாடிப் பொருள் முதலியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்களும் சில அன்றைக்குத் துறையை அடைந்திருந்தன. சுங்க வரி தண்டுவோராகிய அரசாங்கச் சுங்கக் காவலர்கள் வரும் பொருள்களுக்கும், போகும் பொருள்களுக்கும் மகர மீன் முத்திரை குத்தி வரி வாங்கிக்கொண்டிருந்தனர்.

அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை கலகலப்புக்கிடையிலும் நாராயணன் சேந்தனுடைய திருவுருவம் தனியாகத் தெரிந்தது. குழல்வாய்மொழியின் பல்லக்கு வருவதைப் பார்த்துவிட்டு முன்னால் ஓடிவந்து வரவேற்பதற்காகக் கூட்டத்தில் முண்டி இடித்துக்கொண்டு வந்தான் சேந்தன். சுங்க வரி செலுத்தாமல் பொருள்களைக் கள்ளத் தனமாக கடத்திக்கொண்டு போகிறவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக மாறு வேடத்தோடு பல காவலர்கள் கூட்டத்துக்கிடையே உலாவிக் கொண்டிருப்பார்கள். அவசரமாக இடித்து முந்திக்கொண்டு விரைந்து வந்த சேந்தன் அத்தகைய சுங்கக் காவலன் ஒருவன் மேல் மோதிக்கொண்டான். அந்தக் காவலன் சேந்தனுடைய இரண்டு கைகளையும் சேர்ந்து இறுக்கிப் பிடித்துக்கொண்டு அவனையே உற்றுப் பார்த்தான். மார்புக்குக் கீழ் இடுப்புக்கு மேல் சரிந்து முன்தள்ளிய சேந்தனின் தாழிப் பெரு வயிற்றில் அவனுடைய பார்வை நிலைத்தது. அவனுடைய பார்வையைக் கண்டதும் நாராயணன் சேந்தனுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.

“என்ன அப்படிப் பார்க்கிறாய்? சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான் நாராயணன் சேந்தன்.