பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


கிடப்பார்கள் என்று மனத்துக்குள் எண்ணியவனாய், “தம்பி, இந்தக் கப்பலில் வேறு யாரையும் ஏற்றிக்கொள்வதற்கில்லை. நீ போய் வேறு கப்பல்களைப் பார்” என்று பதில் சொன்னான் சேந்தன். அந்த இளைஞன் சேந்தன் கூறியதைக் கேட்டுக் கொண்ட பின்னும் அங்கிருந்து போகாமல் நின்றான்.

“சகோதரி! நீங்களாவது மனம் இரங்குங்கள். நான் பயந்த சுபாவம் உள்ளவன். உங்களைப்போல் துணையோடு பயணம் செய்தால் எனக்கும் நல்லது” என்று குழல்வாய் மொழிக்கு அருகில் போய் நின்றுகொண்டு கெஞ்சினான். பெண்மையின் எழிலும் ஆண்மையின் மிடுக்கும் ஒன்றுபட்டுத் தோன்றிய அந்த விடலைப் பிள்ளையை நிமிர்ந்து நன்றாகப் பார்த்தாள் குழல்வாய்மொழி. அவள் கண்களைக் கூச வைத்தன அவன் பார்த்த பார்வையும், சிரித்த சிரிப்பும். சினத்தோடு முகத்தைச் சுளித்துப் பார்வையைக் கடுமையாக்கினாள் குழல்வாய்மொழி. அதன் பின்பே இளைஞன் சிரிப்பதை நிறுத்தினான். - “தம்பி! நீ பயந்த சுபாவம் உள்ளவன் என்கிறாய்! ஆனால் இடையில் பெரிதாக உறையிட்ட வாள் தொங்குகிறது. பொய்யும் புரட்டும் பேசுவதற்குக் கொஞ்சம் வயதான பின்னர் கிளம்பியிருக்கலாமே நீ! உன் முகத்தைப் பார்த்தால் பால் வடிகிறது. பேச்சைப் பார்த்தால் சூது இருக்கிறதே! மீசைகூட இன்னும் அரும்பவில்லை, அதற்குள் இதெல்லாம் எங்கேயப்பா கற்றுக்கொண்டாய் நீ?” என்று சேந்தன் கடுமையான குரலில் இரைந்தான்.

“ஐயோ! கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் பார்த்தால் நல்லவர் மாதிரித் தெரிந்தது, உதவி செய்வீர்க ளென்று நம்பிக் கேட்டேன்.” -

“போ! போ! அதெல்லாம் முடியாது. இந்தக் கப்பலில் இடம் கிடையாது.”

“மனத்தில் இடமிருந்தால் கப்பலில் இடம் இருக்கும். கொஞ்சம் தயவு செய்யுங்கள்."