பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

405


‘பேசாமல் போகிறாயா? கப்பல் ஊழியனைக் கூப்பிட்டுப் பூசைக்காப்பு முதுகில் போடச் சொல்லட்டுமா ?” சேந்தனின் ஆத்திரத்தைக் கண்டு அந்த இளைஞன் கன்னங் கனியச் சிரித்தான். குழல்வாய்மொழி தன் மனத்தை எவ்வளவுதான் அடக்கிக் கட்டுப்படுத்திப் பார்த்தாலும் அவள் விழிகள் அவளையும் மீறி அந்தச் சிரிப்பை ஆவலோடு ஒரக் கண்ணால் காண விரைந்தன. பொல்லென்று பூத்து மறையும் முல்லைப்பூ வரிசைபோல் அப்படி ஒர் அழகிய சிரிப்பு அது. சிரித்துக் கொண்டே அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தான் அந்த இளைஞன். அவன் சிறிது தள்ளிச் சென்ற பின்பு சேந்தன் குழல்வாய்மொழியைப் பார்த்து, “அம்மணி! இந்த மாதிரி விடலைப் பயல்களை நம்பவே கூடாது. சிரிப்பையும் பேச்சையும், முகமலர்ச்சியையுமே முதலாக வைத்துக் கொண்டு வஞ்சகம், ஏமாற்று ஆகிய பண்டங்களை விற்பனை செய்யும் அறவிலை வணிகர்கள் இப்போது உலகத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். கவனமாக இருக்க வேண்டும். புலியையும் சிங்கத்தையும் பார்த்துப் பயந்து கொண்டிருந்தது போய் இப்போது மனிதர்களைப் பார்த்தே மனிதர்கள் பயப்படவேண்டியிருக்கிறது. புலிக்கும், சிங்கத்துக்கும், கெட்டவற்றைத் திட்டமிட்டுக்கொண்டு செய்வதற்கு மனம் என்ற ஒன்று இல்லை. மனிதர்களுக்கு அது இருக்கிறது” என்று பெரிய அற நூலாசிரியனைப் போல் பேசினான் சேந்தன். - - - “கீழே நின்று கொண்டிருந்தால் மறுபடியும் அந்த இளைஞன் வந்து ஏதாவது கேட்டுக் கெஞ்சுவான். அல்லது வல்வழக்குப் பேசி வம்பு செய்வான். வாருங்கள்! கப்பலில் போய் இருந்து கொண்டு பேசலாம்” என்று சேந்தனைக் கூப்பிட்டுக் கொண்டு கப்பலுக்குள் ஏறிச் சென்றாள் குழல்வாய்மொழி.

கப்பலுக்குள் சென்றபின் அவர்கள் பேச்சு, குமார பாண்டியனை எந்தெந்தத் தீவுகளில் தேடுவது? எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்பது பற்றி நிகழ்ந்தது. சிறிது