பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

39


ஆனால் தோணியில் வீற்றிருந்தவர்கள் யார்? யாரைக் கண்டு தளபதி இவ்வளவு வியப்படைகிறான்?

யாரைத் தேடி வந்தானோ அந்த இடையாற்று மங்கலம் நம்பியே படகில் உட்கார்ந்திருந்தார். அவரோடு அவருடைய திருக்குமாரியாகிய குழல்வாய்மொழி நாச்சியாரும், தளபதி இதற்கு முன் பார்த்திராத ஒரு வாலிபத் துறவியும் படகில் அமர்ந்திருந்தனர். தாடி மீசையோடு காட்சியளித்த அந்தத் துறவியின் களை சொட்டும் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. தளபதியின் உருவத்தைத் துறையின் அருகில் கரையின்மேல் கண்டதும் தோணி நின்றது. “யாரது கரையில் வந்து நிற்பது? இந்நேரத்துக்கு வேற்றாட்களைத் தோணியில் ஏற்றும் வழக்கம் இல்லை’ என்று கூச்சலிட்டான் அம்பலவன் வேளான்.

அதைக் கேட்டு மெல்லத் தனக்குள் சிரித்துக் கொண்டே, “மகாமண்டலேசுவரர் க்குத் தளபதி வல்லாளதேவனின் வணக்கங்கள் உரியனவாகுக!” என்று கூறியவாறு, தீப்பந்த வெளிச்சம் தன் முகத்தில் படும்படி படகு அருகே வந்து நின்று கொண்டான் தளபதி.

கம்பீரமான தோற்றமும் அறிவொளி வீசும் முகத்தில் கூர்ந்து நோக்கும் கண்களும் கொண்ட இடையாற்று மங்கலம் நம்பி, “யார் வல்லாளதேவனா? ஏது இந்த அர்த்த இராத்திரியில் இப்படி இங்கே திடீர் விஜயம்?” என்றார். அப்பப்பா! என்ன மிடுக்கான குரல்!

“மகாராணியார் ஒர் அவசர காரியமாக அனுப்பி வைத்தார்கள்.”

“சரியான சமயத்துக்குத்தான் வந்தாய்! இன்னும் கால் நாழிகை கழித்து வந்திருந்தால் எங்கள் தோணி அக்கரை சென்று அடைந்திருக்கும். வா. நீயும் படகில் ஏறிக்கொள். மாளிகையில் போய்ப் பேசிக் கொள்ளலாம்!”

“தளபதியாரே! வாருங்கள்” என்று சிரித்துக்கொண்டே அவனுக்கு இடம் கொடுத்தாள் மகாமண்டலேசுவரரின்