பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

409


உலகில் அரசர்கள் இருக்கமாட்டார்கள். அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள். என்னைப்போல் மகாமண்டலேசுவரர்கள் இருக்க மாட்டார்கள். தளபதி வல்லாளதேவனையும், உன்னையும் போல் ஆள்கட்டுள்ள படைத்தலைவர்கள் மக்களையும், அறிவாளிகளையும் அடக்கி ஒடுக்கிவிட்டுத் தங்களைத் தாங்களே அரசர்களாக்கிக் கொண்டுவிடுவார்கள். எதிர்காலத்தில் பல நூறு தலைமுறைகளுக்குப்பின் இப்படிப்பட்ட படைவீரர் ஆட்சி உலகெங்கும் ஏற்பட்டாலும் ஏற்படும். ஆனால், இந்தத் தலைமுறையில் மகாராணி வானவன் மாதேவியும், என் போன்றோரும் உயிரோடு இருக்கிறவரை இந்த நிலை வரவேண்டாம். வரக்கூடாது. வரவிடவும் மாட்டேன்.” - இந்தச் சொற்களைக் கூறும்போது மகாமண்டலேசுவரருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே? என்ன ஒளி! என்ன அழுத்தம்! எவ்வளவு உறுதி!

ஏனடா இந்த மனிதரிடம் அகப்பட்டுக் கொண்டோ மென்று எண்ணி வெலவெலத்து நடுங்கிப் போனான் மெய்க்காவற்படைத்தலைவன். மகாமண்டலேசுவரருடைய மனத்தில் ஒரு விஷயம் தைத்து அதைப்பற்றி அவர் பேசத்தொடங்கி விட்டாரென்றால் பின்பு அதை எதிர்த்துப் பேசி வாதாடுவதற்கு இன்னொரு மகாமண்டலேசுவரர் பிறந்து வந்தால்தான் உண்டு.

“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச் சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து”

என்று சொல்வன்மையைப் பற்றிக் கூறியது அவருக்கே பொருந்தும். இடையாற்றுமங்கலம் நம்பி கூறுகிற ஒரு வார்த்தையை வெற்றி கொள்ளும் மற்றோர் வார்த்தையை மற்றொரு மனிதர் கண்டுபிடித்துப் பேசுவதற்கு இல்லை. தம் சொல்லை வெல்லும் மற்றொரு சொல்லை அவரே கண்டுபிடித்துச் சொன்னால்தான் உண்டு. நினைப்பில், பேச்சில், செயலில் அப்படி ஓர் ஈடு இணையற்ற சாமர்த்தியம் அமைவது மிகவும் அபூர்வம்.