பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


மாறுபடுவார்களோ என்ற உள்பயம் அவருக்கு ஏற்பட்டது. தொடக்கத்தில் சீவல்லபனும் அதற்கேற்றாற்போல் நடந்துகொள்ளவே அவனும் ஆகாதவனாகிவிடுவானோ என்ற அச்சம் அந்தக்கணமே சூழ்ந்து கொண்டது அவரை.

அந்தக் கணத்திலிருந்தே அவனைத் தட்டிக்கொடுத்து அவனோடு அதிகமாகப் பேசத் தொடங்கிவிட்டார் அவர். துணிவு வந்துவிட்டால் அறிவுள்ளவனுக்கு ஆயிரம் யானைப் பலம் ஏற்படுகிறது. பயம் வந்துவிட்டால் அவனைவிடக் கோழை உலகத்தில் வேறு எவனும் இருக்க முடியாது. மகாமண்டலேசுவரர் அன்று நடந்து கொண்ட விதம் இந்த உண்மைக்குப் பொருத்தமாக இருந்தது.

சீவல்லபமாறனோ உண்மையில் அவருடைய கண் பார்வைக்கே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தான். தளபதி, ஆபத்துதவிகள் தலைவன், எல்லோருக்குமே அவர் மேல் பிணக்கு இருந்தாலும் அந்தப் பேரறிவுக்கு முன்னால் தலைவணங்கிவிடுகிற நடுக்கம் நிச்சயமாக உண்டு. ஆனால் அப்படியிருந்தும் அவர் அவர்களை எண்ணிப் பயந்துகொண்டு தான் இருந்தார். யானைக்குத் தன் பலம் தெரியாதல்லவா? சங்ககாலத்தில் கிள்ளிவளவன் என்றொரு அரசன் இருந்தான். அவனுடைய கண்பார்வைக்கு நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றல் இருந்ததை -

“நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ

நீ நயந்து நோக்குவாய் பொன்பூப்ப செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்

வெண்திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை” -

என்று ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் மிகையாகப் புகழ்ந்து பாடியிருந்தார். அப்படிப்பட்ட வேண்டியது விளைவிக்கும் ஆற்றல் தம் கண்களுக்கு இருந்தும் மனத்தின் ஒரு மூலையில் வேண்டாத வீண் பயத்தை எண்ணிப் பயப்படும் அறிவுள்ளவனுக்கே சொந்தமான தாழ்வு மனப்பான்மையும்