பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


அமைந்திருந்தது. இந்த மணியம்பலத்தில் இருந்த ஆயிரத்தெட்டு மறையவர்களும், பிறரும், போட்டி பொறாமை, புலமைக் காய்ச்சலின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதில் பராந்தனுக்கு அக்கறை அதிகமாயிருந்தது.

திருச்சேரணத்துச் சமணர்களும் தங்கள் கலாசாலை மூலம் பெரிய காரியங்களைச் சாதித்தனர். தெய்வங்களின் கோவில்கள் பல இருந்தனபோல் அறிவின் ஆலயங்களாக மணியம்பலமும், பிறவும் விளங்கிவந்தன.

எனவே, மகாராணியாகிய வானவன்மாதேவி தாணு மாலய விண்ணகரமென்னும் சுசீந்திரம் தேவாலயத்தைத் தரிசனம் செய்தபின் அறிவாலயமாகிய மணியம்பலத்துக்குப் புறப்பட்டது மிகவும் பொருத்தமும் ஆகிவிட்டது.

பவழக்கனிவாயர் முதலியவர்களும் கூட அன்று அதிகாலையில் தான் அரண்மனையிலிருந்து அங்கே திரும்பி வந்திருந்தார்கள். யாருக்கும் தெரியாமல், யாரும் எதிர்பாராதபோது அப்படித் திடீரென்று மகாராணி அங்கே வருவார் என்று எவரும் நினைத்திருக்க முடியாது. சுசீந்திரத்திலிருந்து புறப்பட்ட சிவிகை காந்தளூர் மணியம்பலத்தை அடையும்போது மாலை மயங்கி இருள் சூழத் தொடங்கியது.

இயற்கையின் அழகான பசுமைக்கோலத்தின் நடுவே தீப ஒளியில் அமைதியாகக் காட்சியளித்தது மணியம்பலம், பகுதி பகுதியாகப் பிரிந்திருந்த அந்தப் பேரம்பலத்தில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொரு வகைக் கலையைக் கற்பிக்கும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. ஒருபுறம் மறை யொலி, இன்னொருபுறம் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களின் விரிவுரை, வேறோர் பகுதியில் பாதச் சிலம்புகள் குலுங்கும் நாட்டிய ஒலி, இசைக் குரல்களின் இனிமைஎல்லா ஒலிகளுமாகச் சேர்ந்து வேறு வகையில் அந்த இடத்தின் அமைதியைத் தெளிவுபடுத்தின.

சிவிகையை விட்டு இறங்கி மணியம்பலத்துக்குள் நடந்தனர் மகாராணியும், புவனமோகினியும்.