பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

423


“நான் முன்னால் ஒடிப்போய்த் தங்கள் வரவைப் பவழக்கனிவாயருக்கு அறிவித்துவிடுகிறேன்” என்று சிறிது விரைவாக முன்னால் நடக்க முயன்ற புவனமோகினியைத் தடுத்து நிறுத்தினார் மகாராணி,

“நமக்குக் கால் இருக்கிறது. நாமே நடந்து செல்லலாம். அவரவர் கடமைகளை அந்தந்த நேரத்துக்கு ஒழுங்காகச் செய்துகொண்டிருக்கும் இந்தக் கலைக்கோயிலில் இப்போது நீ போய் என் வரவைக் கூறினால் இங்குள்ள அத்தனை மறையவர்களும், கலைஞர்களும், மாணவர்களும் ஆசிரியர்களும் பரபரப்படைந்து என்னை வரவேற்பதற்கு ஓடிவந்து வீண் கூட்டம் போடுவார்கள், அந்த ஆடம்பர ஆரவாரத்தை எதிர்நோக்கி நான் இங்கு வரவில்லை.”

புவனமோகினி பதில் சொல்ல வாயின்றி உடன் நடந்தாள். மணியம்பலத்தில் யாருமே இவர்கள் உள்ளே வந்ததைக் கவனிக்கவில்லை.

தர்க்க நியாய சாத்திரங்களையும், சமய நூல்களையும் கற்பிக்கும் ஒரு பகுதிக்கு அருகே வந்ததும் மகாராணியும், புவனமோகினியும் நின்றார்கள். அங்கே ஒரு முதுபெரும் புலவர் மணியம்பலத்தைச் சேர்ந்த சீடர்களைத் தம்மைச் சுற்றிலும் உட்காரவைத்துக் கற்பித்துக்கொண்டிருந்தார். அதில் சில வார்த்தைகள் உள்ளத்தைத் தொடவே, தாம் நிற்பது தெரியாமல் மறைந்து நின்று கேட்கத் தொடங்கினார் மகாராணி. - “துன்பங்கள் குறைவதற்கு எதையும் இழக்கத் துணிகின்ற மனம் வேண்டும். இது வேண்டும், அது வேண்டும் என்று ஆசையை வளர்த்துக்கொண்டு போகிறவனைக் காட்டிலும் எதுவுமே வேண்டாமென்று மனத்தைக் கட்டுகிறவன் பெரிய செல்வன். வேண்டாமையைப் போன்ற சிறந்த செல்வம் வேறில்லை. எந்தப் பொருளை அடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அந்தப் பொருள்களை விரும்புவதால், பெறுவதால் வரும் துயரங்கள். நமக்கு இல்லை.

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்”