பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

41


அருவருப்பாக இருந்தது. வானவன்மாதேவியின் எண்ணங்கள் பல்லக்கைத் துாக்கிச் செல்லும் வீரர்களின் நடையைப் போலவே துரிதமாக மேலெழுந்து சென்றன.

‘இந்தத் தென் பாண்டி நாட்ட்ை ஏதோ நான் அரியணையில் அமர்ந்து ஆண்டு கொண்டிருக்கிற மாதிரி அல்லவா எண்ணுகிறார்கள்? இல்லையானால் என்னைச் சுற்றி ஒற்றர்களும் வஞ்சகர்களும் உலாவக் காரணமென்ன? தரிசனத்துக்குப் போன இடத்தில் முன்னேற்பாடாக மறைந்திருந்து என்னைக் கொல்லச் சதி நடக்கிறது. இது எனக்குப் போதாத காலம் போலிருக்கிறது; சக்கரவர்த்திகள் காலமானபின் நான் அமங்கலியாக மட்டும் ஆகவில்லை; எவ்வளவு துரதிருஷ்டங்களும் துர்ப்பாக்கியங்களும் உண்டோ, அவ்வளவும் என்னை வந்து சார்ந்து விட்டன போலிருக்கிறது. கணவனைத்தான் இழந்தேன், அருமைக் குமாரன் இராசசிம்மனுமா என்னை விட்டு ஒடிப்போக வேண்டும்? போரில் தோற்றுவிட்டால் என்ன? அதற்காகப் பெற்றவளிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் இலங்கைக்கும் புட்பகத்துக்குமா ஓட வேண்டும்? பாழாய்ப் போன எதிரிகளுமா வட பாண்டி நாட்டின்மேல் படையெடுக்க வேண்டும்? நாடு தான் போயிற்று, இவனும் இப்படி எதற்காக ஒடிப் போனான்?

‘எங்காவது சமணப் பள்ளியிலோ, பெளத்தப் பள்ளியிலோ, தீட்சை பெற்று மணிமேகலை, குண்டலகேசி இவர்களைப் போல் எஞ்சிய வாழ்நாளைத் துறவு மார்க்கத்தில் கழித்துவிட எண்ணியிருந்தவளை இந்த மகாமண்டலேசுவரர் ஏன் தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தாரோ? இந்த இடையாற்று மங்கலம் நம்பி இருக்கிறாரே, அப்பப்பா ! எதையும் சில புன்னகைகளாலும், சில வார்த்தைகளாலும் சாதித்து விடுகிறார். எவ்வளவோ விரக்தியோடு இருந்தவளை மனத்தை மாற்றி இங்கு அழைத்துக் கொண்டு வந்து இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் மறுபடியும் இராஜபோகங்களுக்கும், அரசியல் சூழ்ச்சிகளுக்கும் நடுவே சிக்கவைத்துவிட்டாரே! இதிலிருந்து எப்படித் தப்புவது?