பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


படர்ந்து பரிதாபகரமாகத் தோன்றுகிறேதே என்னிடம் பசியைச் சொல்வதற்குப் பயப்பட்டுக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருக்கிறாளென்று தெரிகிறது. பல்லக்குத் தூக்கிகள் பாவம்! மகாராணி சொல்லும்போது மறுக்கக் கூடாதேயென்று பயத்தினாலும் பதவி, பெருமை காரணமாக உண்டாக்கிக் கொண்ட மரியாதைகளாலும் பசியை, நடையை-சுமைக் களைப்பைக் கூறாமல் ஏவியபடி நடக்கிறார்கள். அடடா! சிலபேர் பதவியினாலும், அறிவு மிகுதியாலும் வயது மூத்ததினாலும், மற்றவர்களுடைய துன்பங்களையும், எண்ணங்களையும் பொருட்படுத்தாமல், புரிந்துகொள்ளாமல், தங்களை அறியாமலே பிறருக்குத்துன்பம் தருவதுபோல் நானும் நடந்துகொண்டுவிட்டேனே. அழுதாலும் வாய்விட்டுக் கதறினாலும்தான் துன்பமா? அழாமலும் கதறாமலும் விளாம். பழத்துக்கு வெளியே தெரியாமல் உள்ளுக்குள்ளேயே வரும் நோய்போல் நெஞ்சிலேயே ஏங்கி மாய்ந்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த உலகில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?

மகாராணி பல்லக்கை நிறுத்தச் சொல்லிவிட்டு அதைச் சுமப்பவர்களை விசாரிப்பதற்காகத் தலையை வெளியே நீட்டிக் கேட்டார்: “அப்பா! நீங்களெல்லாம் எப்போது சாப்பிட்டீர்கள்? எனக்குப் பயந்துகொண்டு ஒளிக்காமல் மறைக்காமல் உங்கள் துன்பங்களைச் சொல்லுங்கள். உங்களுக்குக் களைப்பும் பசியும் அதிகமாயிருக்குமே?”

“தாயே! நாங்கள் காலையில் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது சாப்பிட்டதுதான். பசியையும், களைப்பையும் பற்றி நாங்கள் கவலையே படவில்லை. மகாராணியாருக்குப் பணிபுரியும் பாக்கியமே போதும்” என்று விநயமாக மறுமொழி கூறினான், பல்லக்கின் முன்கொம்பைச் சுமந்துகொண்டு நின்ற இருவரில் ஒருவன்.

“புவனமோகினி! உன் முகத்திலும் பசிக்களை படர்ந்து விட்டது. நீ சொல்லாமல் இருந்தாலும் எனக்குத் தெரிகிறது. ‘மகாராணியோடு இனிமேல் எங்குமே வெளியில் புறப்பட்டு வரக்கூடாது. வந்தால் வயிறு காயவேண்டியதுதான் என்று உன்