பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

435


மனத்துக்குள் என்னைத் திட்டிக்கொண்டிருப்பாய்’ என்றார் மகாராணி.

“தாங்களே வெறும் வயிற்றோடு இவ்வளவு இடமும் சுற்றிக் கொண்டிருக்கும்போது நாங்கள் அப்படியெல்லாம் நினைக்க முடியுமா? பயண அலுப்பினால் கொஞ்சம் தளர்ந்து போனேன். வேறொன்றுமில்லை” என்று சிறிது வெட்கத்தோடு தலை தாழ்த்திக்கொண்டு பதில் சொன்னாள் புவனமோகினி. தான் சொல்லக்கூடாதென்று அடக்கிக் கொண்டிருந்தாலும் தன் வயிற்றுப் பசி வேதனை மகாராணிக்கு எப்படியோ தெரிந்துவிட்டதே என்று நாணினாள் அவள்.

'இவர்களுடைய பசிக்கு ஏதாவது வழி செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பெரும் பாவத்தைச் செய்தவள் ஆவேன்’ என்ற உடனடியான உணர்ச்சித் துடிப்பு மகாராணியின் மனத்தில் ஏற்பட்டது. அந்தக் காந்தளூர் நெடுஞ்சாலையில் ஒரு கேந்திரமான இடத்தில் நான்கு கிளை வழிகள் பிரிந்தன. நான்கில் எந்த வழியாகச் சென்றாலும் பாதை சுற்றி அரண்மனைக்குப் போய்ச் சேர முடியும். வழிகள் பிரிகிற இடத்துக்கு வந்ததும், "முன் சிறை வழியாக அரண்மனைக்குச் செல்லும் பாதையில் செல்லுங்கள்” என்று ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்த கருத்தோடு சுமப்பவர்களிடம் கூறினார் மகாராணி. புவனமோகினி குறுக்கிட்டு அதைத் தடுக்க முயன்றாள்:-

“முன்சிறை வழியாகச் சுற்றிக்கொண்டு சென்றால் அரண்மனையை அடைவதற்கு நள்ளிரவு ஆகிவிடுமே ! வேண்டாம் தேவி! எங்களுடைய பசியைப்பற்றி ஏதோ நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு நீங்கள் முன்சிறைப் பாதையாகப் போகலாமென்று சொல்கிறீர்கள் போலிருக்கிறது. இந்தப் பசி ஒன்றும் பிரமாதமில்லை. இதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியும். நாங்களாவது ஒருவேளை சாப்பிட்டிருக்கிறோம். பச்சைத் தண்ணிரால்கூட வயிற்றை நனைத்துக்கொள்ளாமல் மகாராணியாரே எங்களோடு வரும்போது எங்கள் பசியும் களைப்புமா எங்களுக்குப் பெரிது?”