பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டன. அறக்கோட்டத்து வேலைகளை முடித்துக்கொண்டு ஒய்வாக அமர்ந்து உரையாடலில் ஈடுபட்டிருந்தனர் அண்டராதித்தனும் கோதையும்.

“இன்னும் ஒரு நாள் கொற்கையில் தங்கி முத்துமாலை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாம். கலவரத்தைச் சாக்குக் காட்டிப் பயமுறுத்தி என்னை இழுத்துக்கொண்டு வந்து விட்டீர்கள். இப்படித் தொடர்ந்து என்னை ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்கள். இது கொஞ்சங்கூட உங்களுக்கு நன்றாயில்லை” என்று கோதை வம்புக்குக் கொடி கட்டிப் பறக்கவிட்டாள்!

“அதுதானே கேட்டேன்! காரியத்தோடுதான் பேசுவதற்கு வந்தாயா! அன்றைக்கு நாம் இருவரும் கொற்கையிலிருந்து அந்த நேரத்தில் திரும்பியிருக்கா விட்டால், அந்தக் கரவந்தபுரத்துப் பிள்ளையாண்டான் பாழ்மண்டபத்தில் அழுதுகொண்டே கிடந்து திண்டாடியிருப்பான். பாவம்! அவனுக்கு அப்படியா நேரவேண்டும் எந்தப் பயல்களோ, திருமுகத்தைப் பறித்துக்கொண்டு அடித்துப் போட்டுவிட்டுப் போயிருக்கும் போது நாம் சென்றதால் அவனுக்கு உதவ முடிந்தது கோதை! இந்த மாதிரி மற்றவர்களுக்குத் துன்பத்தைப் போக்கி உதவுவதில் கிடைக்கும் பெருமை ஒரு முத்துமாலையைக் கழுத்தில் அணிந்து கொள்வதால் கிடைக்குமா?”

“அடடா! என்ன் சாமர்த்தியமான பதில் உலகத்திலுள்ள ஆண்பிள்ளைகள். அத்தனைபேரும் எங்கெங்கோ நன்றாகப் பேசிப் பெயர் வாங்கிவிடுகிறார்கள். வீட்டுப் பெண்களிடம் பேசும்போது மட்டும் இப்படி அசடு வழிந்து விடுகிறதே? எனக்கு முத்துமாலை வாங்கித் தருவதற்கு வக்கில்லை என்று ஒப்புக்கொள்ளுங்களேன். ஏன் இப்படிப் பூசி மெழுகிப் பதில் சொல்கிறீர்கள்?”

“அம்மா தாயே! பரதேவதை! உன் வெண்கல நாக்கைக் கொஞ்சம் அடக்கியே பேசு மூலைக்குமூலை படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் யாத்திரிகர்கள் விழித்துக் கொண்டுவிடப்