பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

444

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


விட்டபோது தொடக்கத்தில் அங்கேயிருந்த பரபரப்பு இப்போது இல்லை. மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பி அரண்மனையிலே வந்து தங்கியிருந்து எல்லாக் காரியங்களையும் தம்முடைய நேரடி மேற்பார்வையில் செய்கின்றாராம். போர் நேரிட்டால் ஈழ நாட்டுப் படைகளும், சேர நாட்டுப் படைகளும் தென்பாண்டி நாட்டுக்கு உதவியாக வந்து சேர்ந்து கொள்ளலாமென்று ஒரு தகவல் காதில் விழுகிறது. இதோ அந்தச் செய்திக்கு ஆதாரமாக ஓர் ஒலையும் கைப்பற்றினோம்.” என்று சொல்லிக் கொண்டே, தான் கொணர்ந்திருந்த ஒலையை எடுத்துக் கொடுத்தான் ஒற்றன்.

சோழன் அதை வாங்கி விரித்தான். மற்ற நால்வரும் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அந்தத் திருமுகவோலை இடையாற்றுமங்கலம், நம்பியால் கரவந்த, புரத்துச் சிற்றரசனுக்கு அனுப்பப்பட்டதாகும். மிகமிக முக்கியமான இரகசிய ஒலை என்பதைக் காட்டும் அரசாங்க இலச்சினைகளெல்லாம் அதில் இருந்தன. வடதிசையரசர் படையெடுப்பு நேர்ந்தாலும் அதை நினைத்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியிமில்லையென்றும் ஈழப் பெரும் படையும், மலைநாட்டுச் சேரர் படையும் தங்களுக்கு உதவி புரியும் என்றும் மகாமண்டலேசுவரர் கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தனுக்குப் பரம இரகசிமாக எழுதி யிருந்தார் அந்த ஒலையை.

“கரவந்தபுரத்துத் தூதனிடமிருந்து கைப்பற்றியதென்று முன்பே ஒரு செய்தித் திருமுகத்தை நம் ஆட்கள் அனுப்பியிருந்தார்கள். அதில் கண்ட செய்திகளுக்கும், இதில் காணும் செய்திகளுக்கும் முழு அளவில் முரண்பாடு இருக்கிறதே? நாம் படையெடுக்கப் போகிறோமென்ற செய்தியைக் கேட்டு அவர்கள் பீதியும் பரபரப்பும் அடைந்திருப்பதை அந்த ஒலையிலிருந்து அநுமானித்தோம், ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்த ஒலையிலோ போரைப் பற்றியே கவலைப்படாமல் பாராமுகமாக இருப்பது போலத் தெரிகிறது. இதன் மர்மம் என்னவாக இருக்கும்?"