பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

43


சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டுப் பதில் சொல்லாமல் வழக்கம் போல் சிரித்து விட்டுப் போய் விடுகிறார்.

‘வரட்டும்! நாளைய மகாசபைக் கூட்டத்துக்கு அவர் எப்படியும் வந்துதானாக வேண்டும். அப்போது எல்லாவற்றையும் தெளிவாக மனம் விட்டுச் சொல்லி விடுகிறேன். மகா மண்டலேசுவரரே! என்னை இந்தப் பெரிய கோட்டையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள். என்னால் இனியும் இங்கிருக்க முடியாது. நான் சமண மதத்தில் சேர்ந்து திட்சை பெற்றுச் சந்நியாசினியாகப் போகிறேன். என் மகனையும் தேடி அழைத்து வராமல் என்னையும் இந்தக் கெளரவ வலையில் அடைத்து வதைக்காதீர்கள். என் மனம் விரக்தியடைந்துவிட்டது’ என்று சொல்லத்தான் வேண்டும்.’

“மகாராணி என்ன? இன்னும் பல்லக்கினுள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது சிந்தனையோ?"அதங்கோட்டாசிரியரின் குரலைக் கேட்டு வானவன் மாதேவிக்குச் சுய நினைவு வந்தது. வெளியே பார்த்தார். பல்லக்குகள் புறத்தாய நாட்டுக் கோட்டைக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. பகவதியும், விலாசினியும் தங்கள் பல்லக்குகளிலிருந்து இறங்கிக் கீழே நின்று கொண்டிருந்தனர்.

சிந்தனை வேகத்தில் அரண்மனையை அடைந்து விட்டதை உணர்ந்து கொண்டு பல்லக்கிலிருந்து கீழே இறங்கச் சிறிது நேரமாயிற்று வானவன்மாதேவிக்கு. பகவதியும், விலாசினியும் கன்னங்குழியச் சிரித்துக்கொண்டே மகாராணி யின் அருகே வந்து நின்றுகொண்டனர். முகக் குறிப்பையும் மெளனத்தையும் பார்த்தபோது பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும் மகாராணியின் மனம் நிம்மதியற்று இருக்கிறதென்று தெரிந்துகொண்டனர். அந்த நிலையில் பேசாமலிருப்பதே நல்லதென்று அவர்களுக்குத் தோன்றியது.

உணவு முடிந்தபின் நிலா முற்றத்தில் போய் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஒருவரோடு ஒருவர். பேசிக் கொள்ளவில்லை. அந்த அமைதி அதங்கோட்டாசிரியரின்