பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

455


கொடும்பாளுரானுடைய ஆத்திரத்துக்கு ஆளாகாமல் அந்த மட்டில் தங்கள் தலைகள் தப்பினவே என்று நிறைவுடன் அந்த இடத்திலிருந்து மெதுவாக நழுவி நகர முற்பட்டனர் அம் மூன்று ஆட்களும்.

“நில்லுங்கள்! எங்கே போகிறீர்கள் இவ்வளவு அவசரமாக” சோழமன்னனின் குரல் அவர்கள் நடையைத் தடைப்படுத்தி நிறுத்தியது. அடுத்த விநாடி கொடும்பாளுர் மன்னனைக் கையைப்பற்றி இழுத்துக்கொண்டு தனியே ஒரு மூலைக்குச் சென்றான் சோழ மன்னன். அந்த மூலையில் சித்திர வேலைப்பாடுகளோடு கூடிய பெரிய கிளிக்கூண்டு ஒன்று கைக்கெட்டுகிற உயரத்தில் தொங்கியது. கூண்டின் கதவு திறந்திருந்தது. கூண்டில் வசிக்கும் பல நிறக் கிளிகளும், கிளிக் குஞ்சுகளும் அதன் இருபுறமும் இருந்த மரச் சட்டங்களில் சுதந்திரமாக உட்கார்ந்திருந்தன. திறந்து விட்டதும் வெளியேறி, அடைகிற நேரத்துக்குத் தாமாகவே கூண்டுக்குள் வந்து சேர்ந்துவிடும்படி பழக்கப்படுத்தப்பட்ட கிளிகள் அவை. அந்தக் கிளிக்கூண்டின் அடியில் வந்து நின்று கொண்டதும், “சொன்ன காரியத்தைச் செய்து கொண்டுவரத் திறமையில்லாத அந்த அறிவிலிகளை அழித்து ஒழித்துவிடுவதற்காக என் கைகள் துடித்தன. அந்தத் துடிப்பை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அத்தனை பேருக்கும் நடுவில் என்னைத் தடுத்து அவமானப்படுத்தி விட்டீர்கள்” என்று ஏக்கமும், ஏமாற்றமும் மேலிட்ட குரலில் சோழனை நிமிர்ந்து பார்த்துச் சொன்னான் கொடும்பாளுரான். சோழன் அதைக் கேட்டு மெல்ல நகைத்தான். -

“கொடும்பாளூர் மன்னரே! வேகமாகக் கையை ஓங்க வேண்டும். ஆனால் இலேசாக அறையவேண்டும். கல்லை எறிவதற்கு முன்னுள்ள வேகம் எறியும்போது மெதுவாகிவிடுவது நல்லது.

“கடிதோச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர்” . - என்ற பொய்யில் புலவர் பொருளுரை நம்மைப் போன்ற அரசர்களை மனத்தில் வைத்துக்கொண்டு கூறப்பட்டது