பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


ஆட்களிருந்தால் அவர்களை அனுப்பிக் கொடும்பாளுரானை அழைத்துக்கொண்டு வரச் செய்யலாமென்ற நோக்கத்தோடு சோழன் மெல்ல எழுந்தான்.

ஆனால், அந்தக் கணமே அவன் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. கொடும்பாளுரானே மிக வேகமாக வாயிற்புறத்திலிருந்து கூத்தரங்கத்துக்குள் வந்து கொண்டிருந்தான். அவன் முகச்சாயலும் நடையின் வேகமும் பரபரப்பையும், அவசரத்தையும் காட்டின. வெளியே செல்வதற்காக எழுந்திருந்த சோழன் மறுபடியும் இடத்திலேயே உட்கார்ந்து கொண்டான். வேகமாக உள்ளே பிரவேசித்த கொடும்பாளுர் மன்னன் சோழன் காதருகே போய்க் குனிந்து மெதுவாகப் பேசினான்; “அரசே! தென்பாண்டி நாட்டின் பலவீனத்தை மிகைப்படுத்தக்கூடிய வேறொரு செய்தி சற்று முன்புதான் என் காதுக்கு எட்டியது.” . .

“அப்படி என்ன செய்தி அது?” சோழனும் மெதுவான குரலிலேயே கேட்டான். “சில நாட்களுக்கு முன்னால், இடையாற்றுமங்கலம் மகாமண்டலேசுவரர் மாளிகையில் பாதுகாக்கப்பட்டு வந்த பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீரவாளும், பொற் சிம்மாசனமும் திடீரென்று காணாமற்போய் விட்டனவாம்.”

“யார் வந்து கூறினார்கள் இந்தச் செய்தியை?” “தெற்கேயிருந்து நம் ஒற்றவர்களில் ஒருவன் வந்து கூறினான். நீங்களெல்லாம் கூத்தில் ஈடுபட்டிருந்தபோது இடையில் நான் கொஞ்சம் வெளியே எழுந்து சென்றேன். அதே நேரத்துக்கு அந்த ஒற்றனும் வந்து சேர்ந்ததனால், அவனை அங்கேயே நிறுத்திச் செய்தியை விசாரித்துக் கேட்டுக் கொண்டு வந்தேன்.”

“ஒருவேளை இந்தச் செய்தி இப்படியும் இருக்கலாமல்லவா? நம்மைப் போன்ற வடதிசையரசர்கள் தெற்கே படையெடுத்துத் தென்பாண்டி நாட்டை வென்றுவிட்டால் இடையாற்று மங்கலத்தில் போய் முடியையும், வாளையும், சிம்மாசனத்தையும் தேடி எடுத்துக்கொண்டு விடுவோமோ என்பதற்காக இப்படி ஒரு பொய்ச் செய்தியை மகாமண்டலேசுவரர் பரப்பியிருப்பார்”